Showing posts with label வாராக்கடன். Show all posts
Showing posts with label வாராக்கடன். Show all posts

Tuesday, August 26, 2014

6 துறைகளின் வாராக்கடன் 36 சதவீதம்: ரிசர்வ் வங்கி


தி இந்து:செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014



வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 36 சதவீதம் 6 துறைகளால் ஏற்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டமைப்பு, உலோகம், ஜவுளி, ரசாயனம், பொறியியல் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவை வாராக் கடன் அளவு உயர காரணமாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாராக் கடன் அளவு 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 3.4 சதவீதமாக இருந்தது. முன்னுரிமை தொழில்களுக்கு அளிக்கப்பட்ட கடன் தொகையில் வாராக் கடன் அளவு முந்தைய ஆண்டுடன் கடந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.. கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அளவில் இத்துறைக்கு 30 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னுரிமை அல்லாத துறைகள் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு செலுத்தாத நிலை தொடர்கிறது. வங்கிகளின் செயல்பாட்டு அமைப்பையே இது சிதைக்கும் வகையில் உள்ளது என்று ஆர்பிஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

வங்கிகளின் சொத்து விற்பனை மூலம் மார்ச் காலாண்டில் திரட்டப்பட்ட தொகை ரூ12,710 கோடியாகும். முந்தைய காலாண்டில் இது ரூ. 3,570 கோடியாக இருந்தது. வெளிநாட்டு வங்கிகளின் வாராக் கடன் அளவும் 3 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Monday, August 4, 2014

தமிழகத்தில் வாராக்கடன் நிலுவை ரூ.5,003 கோடி


தினமலர்திங்கள், ஆகஸ்ட் 4, 2014

தமிழகம் முழுவதும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், வாராக்கடன் நிலுவை, 5,003 கோடி ரூபாய் இருப்பதாகவும், நாடு முழுவதும், 1.64 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாகவும், பிரபல தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் எவ்வளவு கடன் வைத்துள்ளது என்பதை, சேலம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் பட்டியலாக வெளியிட்டுள்ளது.இந்தியா முழுவதும், 1.6 லட்சம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இவற்றில், அதிகாரிகள், ஊழியர்கள் என, ஏழு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஐந்து ஊழியர் சங்கமும், நான்கு அதிகாரிகள் சங்கமும் செயல்பட்டு வருகிறது. தேசிய மயமான வங்கிகளை, தனியார் வசம் ஒப்படைப்பதற்கும், புதிய தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கும், வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வங்கிகளை காப்பாற்றும் பொருட்டு, பிரபல தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு கடன் வைத்துள்ளது என்பதை, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், சமீபத்தில் புத்தக வடிவில் வெளியிட்டது. அதேபோல், சேலம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், மாநில அளவில், வங்கிகளில் உள்ள வாராக்கடன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 378 தொழில் நிறுவனங்கள், 5,003 கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.வங்கி ஊழியர் சங்க, பொதுச்செயலாளர், சுவாமிநாதன் கூறியதாவது:
வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கிகள் கொடுத்துள்ள கடன்களை திருப்பி செலுத்துவதில், தொழில் நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை. வங்கி நிர்வாகமும், அவற்றை வசூலிப்பதில் மெத்தனத்தை கடைபிடித்து வருகிறது. தமிழகத்தில், 85 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. கிராமப்புறங்களில், 44 ஆயிரம் கிளைகள் செயல்படுகின்றன. வங்கி டெபாசிட் தொகை, 80 லட்சம் கோடியாகவும், கடன், 62 லட்சம் கோடியாகவும் உள்ளது. வங்கி பணியில், 10.68 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
வங்கியை காப்பாற்ற வேண்டுமெனில், வாராக்கடனை வசூலிப்பதில், மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும். 378 தேசிய வங்கிகளில், 5,003 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இவற்றை வசூலிக்காவிட்டால், விரைவில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Click Here

Sunday, August 3, 2014

வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்பு: சட்டங்களை கடுமையாக்க நிதியமைச்சகம் திட்டம்












 புதியதலைமுறை ஜூலை 31, 2014, 10:55:08 AM

வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து வரும்
நிலையில் கடன் வசூலிப்பு சட்டங்களை
கடுமையாக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடன் வசூல் சட்டங்களில்
செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த
பரிந்துரையை அளிக்க நிபுணர் குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடன்
வசூல் சட்டங்களில் ஏமாற்றுவோர் தப்பிக்க
வழிகள் அதிகம் இருக்கும் நிலையில் இவற்றுக்கு
மாற்று வழிகளை நிபுணர் குழு கண்டறியும்.
நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினால்
அவற்றின் சொத்துக்களை பறிமுதல் செய்து
கடனை நேர் செய்யும் சர்ஃபாசி சட்டத்திலும்
இக்குழு திருத்தங்களை மேற்கொள்ளும்
எனத் தெரிகிறது. இந்தியாவில் 2 லட்சத்து
40 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனாக
உள்ளது. கடனில் தத்தளிக்கும் நிறுவனங்கள்
பலவற்றின் உரிமையாளர்கள் செல்வச்
செழிப்பில் திளைப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Thursday, July 3, 2014

‘வாராக்கடனை குறைக்க என்னிடம் மந்திரக்கோல் இல்லை’



தி இந்து வியாழன், ஜூலை 3, 2014

வாராக்கடனை குறைக்க என்னிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை என்று எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். மார்ச் 31-ம் தேதி வரை 61,605.35 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்.பி.ஐ.க்கு வாராக்கடன் இருக்கிறது.

இப்போதைக்கு வாராக்கடன் சுமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாராக்கடனை குறைக்க மந்திரக்கோல் இல்லை. நாங்கள் எங்களுடைய வேலையை செய்துவருகிறோம். நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி அதிகரிக்கும்போது, தேவை அதிகரிக்கும், பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்படும், முதலீடுகள் அதிகரிக்கும்.அதன் பிறகு நிலைமை சரியாகும் என்றார்.

மார்ச் 31-ம் தேதி முடிய 4.95 சதவீத (அ) 61,605 கோடி ரூபாய் வாராக்கடன் வங்கிக்கு இருக்கிறது. இதனால் வங்கியின் நிகரலாபம் 2012-13ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2013-14ம் ஆண்டு குறைந்திருக்கிறது. எங்கள் முன் இருக்கும் சவால்கள் தெரிகிறது. இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து ஆராயப்பட்ட தீர்வுகளை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

கூடுதல் நிதி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இப்போதைக்கு நிதி ஏதும் தேவைப்படாது. கடன் வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து, நான்கு மாதங்களுக்கு பிறகுதான் சொல்ல முடியும்.

கடன் வளர்ச்சி விகிதம் அதிக ரித்தால் முதலீட்டை அதிகரிக்க பல வகைகள் இருக்கிறது. உரிமப்பங்குகள் வெளியீடு, எஃப்.பி.ஒ., கியூ.ஐ.பி. உள்ளிட்ட பல வகையில் நிதி திரட்ட முடியும். இப்போதைக்கு எதன் மூலமாக திரட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றார்.
கடந்த ஜனவரி மாதம் கியூ.ஐ.பி. வழியாக எஸ்.பி.ஐ. வங்கி 8,032 கோடி ரூபாய் திரட்டியது. ஏப்ரல், மே மாத நிதிப்பற் றாக்குறை குறித்து கேட்டதற்கு, குறுகிய காலத்தை முடிவு செய்ய முடியாது என்றார்.

5000 புதிய ஏ.டி.எம் திறப்பு

டெபிட் கார்டு, ஏ.டி.எம். விகிதத்தை அதிகரிக்க நடப்பு நிதி ஆண்டில் 3,000 முதல் 5,000 ஏ.டி.எம் வரை திறக்க இருப்பதாக எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண குமார் மும்பையில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

இப்போதைக்கு எஸ்.பி.ஐ. வங்கிக்கு 43,515 ஏ.டி.எம்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அதிக ஏ.டி.எம்.கள் இருந்தாலும் எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற ஏ.டி.எம்.களை பயன்படுத்துவதால் 991 கோடி ரூபாயை மற்ற வங்கிகளுக்கு எஸ்.பி.ஐ. செலுத்துகிறது. மற்ற வங்கிகளில் 1500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஏ.டி.எம். என்ற அளவில் இருக்கிறது. 

ஆனால் எஸ்.பி.ஐ. வங்கியில் 2,500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஏ.டி.எம். என்ற அளவில்தான் இருக்கிறது. இதனால் 5,000 புதிய ஏ.டி.எம்.களை திறக்க இருப்பதாக கிருஷ்ண குமார் தெரிவித்தார்.