Showing posts with label சென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி. Show all posts
Showing posts with label சென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி. Show all posts

Saturday, March 9, 2013

சென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு, ஓய்வு பெற்றார்


தினமலர்  மார்ச் 09,2013,00:12 IST
சென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு, நேற்று ஓய்வு பெற்றார். அதற்கு முன், சொத்து விவரங்களை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். மின்சார ரயிலில், வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சக வழக்கறிஞர்கள், அவரை, வழியனுப்பி வைத்தனர்.
கடந்த, 2006ம் ஆண்டு, ஐகோர்ட் நீதிபதியாக சந்துரு நியமிக்கப்பட்டார். 62 வயது பூர்த்தியாவதைத் தொடர்ந்து, நேற்று அவர் ஓய்வு பெற்றார். 80 மாதங்களில், 96 ஆயிரம் மனுக்கள் மீது, உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
நேற்று காலையில், ஐகோர்ட்டுக்கு வந்த உடன், பதிவுத்துறையிடம் காரை ஒப்படைத்தார். பின், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். வழக்கறிஞர்கள், நேற்று கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இருந்தாலும், அவர் முன் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்தார். பிற்பகலிலும், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார்.பிரிவு உபசார நிகழ்ச்சி எதுவும் வேண்டாம் என, அவர் மறுத்து விட்டதால், அவரது சேம்பரில், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர். வழக்கு விசாரணையை முடித்து விட்டு, மாலையில், சேம்பருக்கு திரும்பினார். அப்போதும், திரளாக வழக்கறிஞர்கள் கூடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சொத்து பட்டியல்:

சேம்பருக்கு வரும் முன், தலைமை நீதிபதி அகர்வாலை, அவரது அறையில் சந்தித்தார். தனது சொத்து விவர பட்டியலை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். பின், சேம்பருக்கு வந்தார். கருப்பு கோட், கவுனை கழற்றி விட்டு, கதர் சட்டை, வேஷ்டி உடன், சேம்பரில் இருந்து புறப்பட்டார். வழக்கறிஞர்கள் ஏராளமானோர், அவருடன் வந்தனர்.பத்திரிகை நிருபர்கள் அறைக்கு, நீதிபதி சந்துரு வந்தார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பின், அவரது சக வழக்கறிஞர்கள் நண்பர்களுடன், பாரிமுனையில் உள்ள ஒரு ஓட்டலில், காபி குடித்து விட்டு, பின்னர் மூத்த வக்கீலாக இருந்தபோது, தான் பயன்படுத்திய லிங்கு செட்டி தெருவில் உள்ள அலுவலகத்துக்கு சென்றார். 
அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, வடக்கு கடற்கரை ரயில் நிலையத்துக்கு நண்பர்களுடன் சென்றார். அங்கு மின்சார ரயிலில் ஏறி, மைலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து ஆட்டோவில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்றார்.

முதல் நீதிபதி:


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி எம்.ஜி.எச். ஜாக்சன் என்பவர் 1929ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும்போது, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த வேண்டும் என்று அப்போதைய அட்வகேட் ஜெனரல், வக்கீல்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதி ஜாக்சன், நீதிபதியாக நான் எதுவும் சாதிக்கவில்லை. என் பணியைத்தான் செய்தேன் என்று கூறி பிரிவு உபசார விழாவுக்கு வர மறுத்துவிட்டார்.

இதன்பின்னர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முதல் நீதிபதி கே.சந்துரு என்று வக்கீல்கள் கூறினர். 


நிருபர்களின் கேள்விகளுக்கு, நீதிபதி சந்துரு அளித்த பதில்:

கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில், வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது. இதனால், அவர்களது கட்சிக்காரர்கள் தான் பாதிக்கப்படுவர். அதேபோல், அடிக்கடி "வாய்தா' வாங்கக் கூடாது. வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும்.எனது கடமையை ஆற்றியதில், நான் திருப்தி அடைகிறேன். சுப்ரீம் கோர்ட்டில், "பிராக்டீஸ்' செய்ய போவதில்லை. ஒரு வழக்கறிஞராக, பொது வாழ்வில் ஈடுபடுவேன். சமூகப் பிரச்னைகளுக்கு போராடுவேன். அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை.நீதிபதிகள் நியமனம், வெளிப்படையாக நடக்க வேண்டும். ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஆண்டு தோறும், சொத்துக் கணக்கை, தலைமை நீதிபதியிடம், மற்ற நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு, நீதிபதி சந்துரு கூறினார்.இந்த மாதத்துக்குள் அரசு பங்களாவை, காலி செய்து விட்டு, தனது சொந்த "பிளாட்'டில் குடியேறுகிறார். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, நண்பர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஏப்., 1 முதல், தனது குடியிருப்பு, என, அபிராமபுரம் வீட்டு முகவரியை குறிப்பிட்டுள்ளார்.