Showing posts with label பஞ்சாப் வங்கி கொள்ளை. Show all posts
Showing posts with label பஞ்சாப் வங்கி கொள்ளை. Show all posts

Saturday, November 1, 2014

பஞ்சாப் வங்கி கொள்ளை : மூவர் கைது: ஒருவர் மர்ம மரணம், 39 கிலோ தங்கம் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட பொருட்களுடன் காவல்துறையினர். படம்: பிடிஐ
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட பொருட்களுடன் . படம்: பிடிஐ

தி இந்து:சனி, நவம்பர் 1, 2014

ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுரங்கம் தோண்டி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களிட மிருந்து 39 கிலோ தங்கம், வெள்ளி நகைககள், ரூ. 60 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளி என சந்தேகிக் கப்படும் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக் கலாம் எனக் கருதப் படுகிறது.

கொள்ளை

ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் கோஹனா நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைக் கிளையில் கடந்த 26-ம் தேதி சுரங்கம் தோண்டி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ரூ. 40 லட்சம் மற்றும் 84 லாக்கர்களில் இருந்த பொருட் களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக, தனிப் படை அமைத்து ஹரியாணா காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். ஹரியாணா காவல்துறைக்கு உதவுவதற்காக, கூட்டுப் புலனாய்வுக் குழு தலைவர் ஆர்.என். ரவியை பிரதமர் அலு வலகம் அனுப்பி வைத்தது.

குற்றப் பின்னணி இல்லாதவர்கள்

இதனிடையே, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது சந்தேகம் எழுந்தது. அதில் மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவருமே, சம்ப வம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள கத்வால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை இல்லை.

அவர்களிடமிருந்து 39 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் கொஞ்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் சதீஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சுரேந்தர் ஆய்வுக் கூடத்தில் (லேப் டெக்னீஷியன்) பணிபுரிகிறார், பல்ராஜ் விவசாயி. மேலும் ராஜேஷ் என்ற ஒரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஒருவர் மரணம்

இக்கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் மஹிபால் என்பவர், பானிபட் சாலையில் நேற்று காலை 3 மணிக்கு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். அவர் உடலில் வெளிப்படையாகக் காணத்தக்க காயங்கள் எதுவும் இல்லை.

வங்கிக்குள் செல்வதற்காக, கைவிடப்பட்ட வீட்டிலிருந்து சுரங்கம் தோண்டப்பட்டிருந்தது. மஹிபால் அவ்வீட்டின் உரிமை யாளராவார்.
“கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற மற்ற நால்வருக்கும் உதவி புரிந்த முக்கியக் குற்றவாளி மஹிபால். தான் பிடிபட்டு விடு வோம் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்” என காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.

இரவில் தோண்டிய சுரங்கம்

மஹிபாலின் பயன்படுத்தப் படாத வீட்டுக்கு தினமும் இரவில் சென்ற குற்றவாளிகள், விடியும் வரை சுரங்கம் தோன்றியுள்ளனர். இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்துள்ளனர்.

சுரங்கம் தோண்டும் போது, அவ்வழியாகச் சென்ற தொலை பேசி இணைப்புகள், குடிநீர் குழாய் இணைப்புகள் ஆகியவற்றுக்கு சிறிதும் இடையூறு இல்லாமல் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மூன்றடி உயரம், 2-3 அடி அகலத் துக்கு சுமார் 100 அடி தொலைவுக்கு சுரங்கம் தோண்டியுள்ளனர்.

எழும் சந்தேகம்

“திருட்டுத் தொழிலில் அனுபவ மற்ற கத்துக்குட்டிகளான இவர்கள், மிக நுட்பமாகத் திட்டமிட்டு, இதை அரங்கேற்றியிருப்பது ஆச்சர்ய மளிக்கிறது. மஹிபாலின் திடீர் மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 உண்மையான கதை இன்னும் வெளிவரவில்லை எனக் கருதுகிறேன். வங்கி ஊழியர் அல்லது வாடிக்கையாளருக்கோ இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்பதை மறுப்பதிற்கில்லை” என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

பிடிபட்ட சுரேந்தர்

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கைது செய்யப்பட்ட சுரேந்தர், அந்த பாழடைந்த வீட்டுக்கு அருகே அடிக்கடி சுற்றித் திரிந்ததைப் பார்த்த காவல்துறை தகவலாளி, அதை எங்களுக்கு தெரிவித்தார். 

அவரை கத்வால் கிராமத்தில் பிடித்தபோது, சுரேந்தர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கூட்டாளிகள் பெயரையும் சொல்லி விட்டார்” என்றார்.