Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Thursday, October 9, 2014

ரூ.100 கோடி அபராதம் அதிகார விதிகளை மீறிய ஒன்றாகும் மேல் முறையீட்டு மனுவில் ஜெயலலிதா தகவல்

தினத் தந்திபெங்களூர், வியாழன் , அக்டோபர் 09,2014, 12:27 PM

ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா பெங்களூரில் உள்ள கர்நாடகா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மேல் முறையீட்டில், வழக்கு விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. சொத்து மதிப்பு கணக்கீடு அதிகமாக காட்டப்பட்டுள்ளது’ என்பது உள்பட பல்வேறு அம்சங்களை ஜெயலலிதா சுட்டிக்காட்டி உள்ளார்.

பெங்களூர் சிறப்புக் கோர்ட்டு வழங்கியுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். ரூ.100 கோடி அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் ஜெயலலிதா தனது மேல் முறையீட்டு மனுவில் கூறியுள்ளார். அந்த மனுவில் அவர் மேலும் கூறி இருப்பதாவது:-

என் மீதான குற்றச்சாட் டுக்களில் தீர்ப்பளித்த பெங்களூர் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எனக்கு 100 கோடி ரூபாஅபராதமாக விதித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான தீர்ப்பாம். இதுவரை நடைமுறையில் இல்லாதது.

மற்றொரு வகையில் பாத்தால் எனக்கு விதிக்கப் பட்டுள்ள 100 கோடி ரூபா அபராதம் முற்றிலும் அதிகார விதிகளை மீறிய ஒன்றாகும். ஏனெனில் என் மீது ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் அதற்கு இரு மடங்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் நீதிபதி இப்படி ஒரு அபராதத்தை விதித்து உத்தரவிட முடியாது. இது சட்ட அதிகார விதிகளை மீறியதாக உள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

எனக்கு 100 கோடி ரூபா அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக உள்ளது. அவர் ஒரு நோக்கத்துடன் இல்லா விட்டாலும், அவர் உத்தரவு இதையே காட்டுகிறது. மேலும் ரூ.100 கோடி அபராதத் தொகையை எப்படி செலுத்துவது என்று உத்தரவிடுவதிலும் நீதிபதி தவறு செய்துள்ளார். அபராதத் தொகை எப்படி செலுத்தப்பட வேண்டும் என்று கூற அவருக்கு அதிகாரம் இல்லை.

சொத்து குவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பெரும்பாலும் இதர வைப்பு முதலீடுகள் என்னால் செய்யப்பட்டவை அல்ல. என்னிடம் பெரிய அளவில் பணம் கை இருப்பும் இல்லை.அவையெல்லாம் வேறு நபர்கள் பெயர்களில் உள்ளது. அப்படி இருக்கும் போ நான் மட்டுமே ரூ.100 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது சட்ட ரீதியாக சரியானது அல்ல.

மேலும் 7040 கிராம் தங்கம் எனக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீதிபதி தன் தீர்ப்பில் அந்த தங்கத்தை பற்றி குறிப்பிடவே இல்லை.அப்படி இருக்கும் போது ரூ.100 கோடி அபராதத் தொகை, அந்த தங்க நகைகளில் இருந்து ஈடுகட்ட முடியும் என்று எப்படி சொல்ல முடியும்?

என் மீதான வழக்கு பெங்களூர் சிறப்புக் கோர்ட்டில் நடத்தப்பட்டதற்கு கர்நாடக அரசு ரூ.5 கோடி செலவு செய்திருப்பதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறி உள்ளார். இந்த 5 கோடி ரூபா செலவை நான் கர்நாடக அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இது தவறான தீர்ப்பாகும் இந்த உத்தரவில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒரு போதும் செலவுத் தொகையை பெற முடியாது.

மேலும் இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே சிறப்பு கோர்ட்டு நீதிபதியின் உத்தரவு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலுக்கு எதிராக உள்ளது.இவ்வாறு ஜெயலலிதா தன் மேல் முறையீட்டு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 27- தேதி (திங்கட்கிழமை) பெங்களூர் ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது.

 

Wednesday, October 1, 2014

நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?



தி இந்து:புதன், அக்டோபர் 1, 2014

மன்னார்குடியில் வந்த குடும்பத்தினருடனான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நட்பு ஒரு நாள் அவரது அரசியல் வாழ்வை முடக்கும் என்ற அவரது அரசியல் விசுவாசிகள் பலரது கணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது சனிக்கிழமை வெளியான தீர்ப்பு.
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது நடந்த சம்பங்கள் குறித்து நன்கு அறிந்தவர்களின் குற்றச்சாட்டு சசிகலா அந்தக் காலகட்டத்தில் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்களை கையில் வைத்திருத்தார் என்பதாகவே இருக்கும். சசிகலாவும் அவரது சகாக்களும் தமிழகம் முழுவதும் இடங்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

1980-களில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. அப்போது இருந்தே ஜெயலலிதாவும்-சசிகலாவும் நல்ல நட்புறவில் இருக்கின்றனர். கட்சிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவருடன் சசிகலாவும் இருப்பார்.

ஜெயலலிதாவின் வீட்டிலேயே சசிகலா தங்க ஆரம்பித்தார். சசிகலா தவிர அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் அவருடன் ஜெயலலிதாவின் வீட்டில் தங்கினர். சசிகலாவின் உறவினர்களில் ஒருவரான பாஸ்கரன் தொலைக்காட்சி ஒன்றை நிர்வகித்து வந்தார். மற்றொரு உறவினர் வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆனார்.

1995 செப்டம்பரில் நடைபெற்ற சுதாகரனின் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானதே, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பின் பலன் தேர்தலில் எதிரொலித்தது. மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 1996 பொதுத் தேர்தலில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி கண்டது.

சிறிய பிரிவு:

தேர்தல் பின்னடைவுக்குப் பின்னர், சசிகலா, மற்றும் அவரது குடும்பத்தினருடனான நட்புறவை துண்டித்துக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்தார். வளர்ப்பு மகனையும் கைவிட்டார். வாழ்நாள் முழுவது நகைகள் அணியப்போவதில்லை என சூளுரைத்தார்.

சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு அமலாக்கப் பிரிவு முதலில் செக் வைத்தது. தொலைக்காட்சி சேனலுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். 1996 ஜூன் மாதம் சசிகலாவும் அந்நியச் செலவாணி சட்ட விரோத பயன்பாடு, கடத்தல் தடுப்புச் (COFEPOSA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டி.டி.வி.தினகரனும் கைதானார்.

ஆனால், சசிகலா விடுதலையான பின்னர், மீண்டும் மலர்ந்தது ஜெயலலிதா - சசிகலா நட்பு. ஆனால், அரசு பி.ஆர்.ஓ.வாக இருந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் எப்போதுமே ஜெயலலிதாவின் நல் அபிப்ராயத்தைப் பெறவில்லை. அவர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஜெயலலிதா சந்தேகித்தார்.

இதனால், டிசம்பர் 2011-ல் சசிகலா குடும்பத்தினர் சசிகலா குடும்பத்தினரை நட்வு வளையத்தில் இருந்து மீண்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. அதிமுகவை கையகப்படுத்த நடராஜனும், மற்றவர்களும் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாகக் கருதி ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஜெயலலிதாவின் நடவடிக்கை கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மன்னார்குடி குடும்பத்தினருடனான நட்பே ஜெயலலிதாவுக்கு கேடு விளைவித்ததாக கட்சியினர் நம்பினர். ஆனால், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி 100 நாட்கள் மட்டுமே நீடித்தது. சசிகலா, தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு பணிந்தார் ஜெயலலிதா.

1990-களில் சசிகலாவும் அவரது கூட்டாளிகளும் துவங்கிய தொழில்நிறுவனங்கள் மூலம் கிடைத்த சொத்தே பின்னாளில் ஜெயலலிதாவை நீதிமன்றங்களில் நிறுத்தியது. சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தை இந்த நிறுவனங்களே வருவாய் என திரித்துக் கூறின என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு



தி இந்து:புதன், அக்டோபர் 1, 2014

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் நேற்று முழுவதும் ஹோட்டல் அறையில் காத்திருந்த அனைவரும் இரவில் சென்னைக்கு திரும்பினர்.

'ஆட்சி நிர்வாகத்தில் கவனம்'

தமிழக முதல்வரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுப்பு தெரிவித்தது ஓ.பி.எஸ். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனத் தெரிகிறது. இதனை சிறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதாவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
"ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழகத்தின் முதல்வராகிவிட்டார். அவர் சிறைச்சாலைக்கு வருகை தருவது சரியல்ல. மாறாக அவர் ஆட்சி நிர்வாகத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்" என சிறைத்துறை ஊழியர் வாயிலாக ஜெயலலிதா முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு அனுப்பிய தகவலில் கூறியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை மாலை தமிழகத்தின் புதிய‌ முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் அன்றிரவு 9 மணிக்கு பெங்களூரை வந்தடைந்தார்.அவருடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், விஜயபாஸ்கர், வைத்தியலிங்கம் ஆகியோரும் வந்தன‌ர்.

பெங்களூரில் உள்ள மதான் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர்கள், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று காலை 9 மணிக்கு சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியிருந்தனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதில் ஜாமீன் கிடைத்தால் விடுதலை செய்தியுடன் அவரை சந்திக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் காத்திருந்தார்.

மேலும் சிறை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு வளர்மதி, கோகுல இந்திரா, தங்கமணி, வேலுமணி, ராமராஜ், செந்தில் பாலாஜி, மோகன் ஆகிய அமைச்சர்களும் பரப்பன அக்ரஹாராவுக்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட‌வில்லை.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்க அவரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை என கூறிவிட்டார்.

எனவே ஒரு நாள் முழுவதும் பெங்களூரில் காத்திருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் நேற்று மாலை 5 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினர்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்த பிறகு தங்களை ஜெயலலிதா சந்திப்பார் என பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படு கிறது.

ஜெயலலிதா :ஏ கிளாஸ் வசதி... வீட்டு சாப்பாடு... வெள்ளை சீருடை இல்லை! - பரப்பன அக்ரஹாராவிலிருந்து லைவ் ரிப்போர்ட்


தி இந்து:புதன், அக்டோபர் 1, 2014

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. 

அதில் 90 சதவீதம் தவறானவை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உண்மை நிலையை அறிந்து கொள் வதற்காக சிறையில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தவர்களிடமும் சில சிறைத்துறை அதிகாரிகளிடமும் பேசினோம்

. அவர்கள் அளித்த தகவல் வருமாறு:

வருமான வரி செலுத்துபவர் என்ப தாலும், முக்கிய அரசியல் தலைவர் என்பதாலும் பரப்பன அக்ரஹாரா சிறை யில் ஜெயலலிதாவுக்கு ‘ஏ-கிளாஸ்' அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ‘விஐபி'கள் அடைக் கப்பட்டுள்ள பகுதியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கட்டிடம் இல்லை. எனவே மற்ற விஐபிகள் இருக் கும் பகுதியிலேயே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் இருக்கிறார்கள்.

மேலும் ஜெயலலிதாவின் உடல் நிலையையும் வயதையும் கருத்தில் கொண்டு சிறைத்துறை நிர்வாகம் அவருக்கு அதிக‌ கட்டுப்பாடுகளை விதிக்க வில்லை. அதேபோல நீதிபதி டி'குன்ஹா வும் ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து எதுவும் தெரிவிக்க வில்லை. எனவே சிறைத்துறை விதிமுறை களின் அடிப்படையில் அவருக்குஅனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா தங்கியிருக்கும் அறையில் கலர் டி.வி., மின்விசிறி, மெத்தையுடன் கூடிய கட்டில், மேஜை நாற்காலி ஆகிய வையும் இருக்கின்றன. அறையுடன் இணைந்த தனி கழிப்பறை வசதியும் இருக்கிறது. அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு வெளியிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது.

மேலும் ஜெயலலிதாவுக்கு கைதிகளுக் கான வெள்ளை சீருடையும் வழங்கப்பட வில்லை. வழக்கமான உடைகளை அணிந்து கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. எனவே அவருடைய உதவியா ளர்கள் இரண்டு சூட்கேஸ்களில் உடைகளை கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.

மருத்துவ வசதி

ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தினமும் காலை 9 மணிக்கும் மாலை 7.30 மணிக்கும் சிறை மருத்துவர் பரிசோதனை மேற்கோள்கிறார். தேவையான நேரத்தில் முதலுதவி செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரது குடும்ப மருத்துவர் திங்கள்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து சில பரிசோதனைகளை செய்தார். மேலும் அவருக்கு தேவையான மருந்து, மாத் திரைகளையும் வழங்கியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, இதயக்கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் எண்ணெய் தவிர்த்த உணவை சாப்பிடுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளார். எனவே அதிக அளவில் பச்சைக் காய்கறிகள், பால், மோர், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுகிறார். இது தவிர வெளியிலிருந்து கொண்டுவரப்படும் இட்லி, பிரட், சாண்ட்விச் மற்றும் வீட்டில் சமைத்து கொண்டுவரப்படும் உணவையும் சாப்பிடுகிறார். உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகளை வைத்துக் கொள் வதற்காக அவருக்கு குளிர்சாதன வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நடை பயிற்சி மேற்கொள்கிறார்

கடந்த இரு தினங்களாக காலை 5.30 மணிக்கு எழுந்துகொள்ளும் ஜெய லலிதா, விஐபிகளுக்கான பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்கிறார். காலை 7.30, மதியம் 12.30, இரவில் 8 மணிக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. இடையில் சசிகலா, இளவரசி ஆகியோரை சந்தித்து பேசவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

தன்னை பரிசோதிக்க வரும் மருத்துவர், சிறை காவலர்களிடம் சரளமாக கன்னடத்தில் பேசுகிறார். சில நேரங்களில் சசிகலா, இளவரசிக்கு தேவையான வசதிகளையும் சிறை அதிகாரிகளிடம் கன்னடத்தில் பேசி செய்து தருகிறார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க தினமும் காலையில் 3 தமிழ், 2 ஆங்கில செய்தித்தாள்க‌ள் வழங்கப்படுகின்றன.

ஜெயலலிதா நள்ளிரவு வரை விழித்துக்கொண்டிருக்கிறார். பெங்களூரில் தற் போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மின்விசிறி காற்றிலேயே நன்றாக தூங்க முடிகிறது என தன்னை பார்க்க வருப‌வர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல தன்னை யார் பார்க்க வர வேண்டும் என அவர் அனுமதி அளிக்கிறாரோ, அவர்கள் மட்டுமே சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தனர்.

சுதாகரனுக்கு சிகிச்சை
சிறையில் ஜெயலலிதா வசதியாக இருக்கும் அதேநேரத்தில் சசிகலாவும், இளவரசியும் மனம் உடைந்து போய் இருக் கிறார்கள். அவ்வப்போது அவர்களுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சுதாகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாகரனுக்கு இதுவரை 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடியூரப்பா இருந்த அறை
நிலமோசடி புகாரில் சிறைக்கு சென்ற கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அடைக்கப்பட்டிருந்த அறையில்தான் ஜெய லலிதா அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரி நியமனம்

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக‌ சிறைத்துறை ஏடிஜிபி ககன் தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஐபி கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளித்துவரும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. க‌கன் தீப்புக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறை வளாகத்துக்கு வெளியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவை காணவரும் அனைவரும் சிறை வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்படுகின்றனர். 

ககன்தீப் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கிருஷ்ணய்ய ஷெட்டி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு :'பெருந்தொகை சேர காரணமாக காட்டப்பட்ட போலித் திட்டம்'

சென்னை - கிண்டியில் உள்ள 'ஜெயா பப்ளிகேஷன்' கட்டிடம். | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

சென்னை - கிண்டியில் உள்ள 'ஜெயா பப்ளிகேஷன்' கட்டிடம். | 

கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

தி இந்து:புதன், அக்டோபர் 1, 2014

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சந்தாக்கள் பெற்றது வாயிலாக ரூ.14 கோடி பெறப்பட்டதாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் போலியாக ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹாவின் இந்த முடிவே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கக் காரணம்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஜெயலலிதாவும், சசிகலாவும் 1990-ல் தான் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தின் பார்ட்னர்களாக இணைந்துள்ளனர். 



அவர்களது வழக்கறிஞர்கள் வாதத்தின்படி, அந்த வருடம்தான், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.-க்கு சந்தாதாரர்களை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

சந்தாத் திட்டத்தின் கீழ், ரூ.14 கோடி பணம் ஈட்டப்பட்டதாகவும், ஒரு தனிநபரிடம் இருந்து சந்தாவாக பெறப்பட்ட ரூ.3000 பணத்திற்கும் செய்தித்தாளின் ஒரே ஒரு பிரதி மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சந்தா திட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்த நீதிபதி டி’குன்ஹா, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே, சந்தா திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது. 

கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் இருந்தே சந்தா திட்டம் அமலில் இருந்ததற்கான எவ்வித சாட்சியமும் இல்லை என சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சந்தா பெறப்பட்டது தொடர்பான வருமான வரிக் (ஐ.டி.) கணக்குகள் சரியாக உள்ளதாக டிபென்ஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோதும், அதனை தகர்தெறிந்த நீதிபதி குன்ஹா, "1998-ல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளே அப்படி ஒரு திட்டம் இருப்பதையே வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாக" கூறியுள்ளார்.

எனவே, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்கள் விசாரணை நீதிமன்ற நீதிபதியை சமரசம் செய்யும் அளவில் அமையவில்லை. 

ரூ.14 கோடி பணம், ஜெயா பப்ளிகேஷன் சந்தா வாயிலாக பெறப்பட்டது என்ற வாதத்தை நீதிபதி முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

நீதிபதி குன்ஹா கூற்றின்படி, கிரிமினல் வழக்கு பதிவான பிறகே சந்தா திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

1995-ல் அவரது வளர்ப்பு மகன் திருமணத்திற்கு செலவழிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் உறவினர்களாலும், கட்சித் தொண்டர்களாலும் அளிக்கப்பட்டது என்பதையும் நீதிபதி ஏற்கவில்லை.

Wednesday, September 24, 2014

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது: பெங்களூர் நீதிபதி டி'குன்ஹா

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: ம.பிரபு
தி இந்து:புதன், செப்டம்பர் 24, 2014

ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற வேண்டும் என பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி விடுத்த கோரிக்கையை நீதிபதி டி'குன்ஹா நிராகரித்துவிட்டார். எக்காரணம் கொண்டும் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது எனவும் அன்றைய தினம் உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார். போலீஸாரின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்திபவனுக்கு நீதிமன்றம் மாற்றப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில் பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி,குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ஹரிசேகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். பெங்களூர் போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தமிழக உளவுப் பிரிவு உயரதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவு உயரதிகாரிகளும் நேற்று வந்திருந்தனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அன்றைய தினம் பரப்பன அக்ரஹாரா பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, சிறை வளாகம் மட்டுமில்லாமல் ஜெயலலிதா பயணிக்கும் வழிநெடுகிலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்பு வழங்குவது, கர்நாடக உளவு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு போலீஸாருடன் ஆலோசனை நடத்துவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தீர்ப்பு தேதியை மாற்ற கோரிக்கை

இதனிடையே நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், ‘ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் செப்டம்பர் 27-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. மைசூர் தசரா திருவிழா, பெங்களூரில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால் பெங்களூரில் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

எனவே முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகும்போது உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு சில சிரமங்கள் எழுந்துள்ளன. அன்றைய தினம் பரப்பன அக்ரஹாராவில் அதிமுகவினர், பொதுமக்கள், செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள் என 30 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வரக்கூடும் என்பதால் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான போலீஸா ரைக் கொண்டு பாதுகாப்பு வழங்கினால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தீர்ப்பை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
போலீஸாருக்கு கண்டனம்

பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா, ''எக்காரணம் கொண்டும் ஜெயலலிதா மீதான வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது. தேவைப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையோ, மற்ற நிகழ்ச்சிகளையோ வேறு தேதியில் நடத்தச் சொல்லுங்கள்.

கடந்த முறை நீங்கள் (போலீஸார்) கால அவகாசம் கேட்டதால்தான் இந்த தேதிக்கு (செப்டம்பர் 27) தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தேதியை மாற்றச் சொல்வதை ஏற்க முடியாது.எனவே தீர்ப்பு வெளியாக உள்ள வரும் சனிக்கிழமை பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்துக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார்.

Thursday, July 24, 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. தரப்பில் இறுதி வாதம் முடிந்தது: மன நிறைவுடன் வாதிட்டதாக வழக்கறிஞர் பி.குமார் பேட்டி

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் இறுதி வாதத்தை நிறைவு செய்தபின் நிருபர்களிடம் பேசுகிறார் வழக்கறிஞர் பி.குமார்.
தி இந்து:வியாழன், ஜூலை 24, 2014

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தை வழக்கறிஞர் பி.குமார் புதன்கிழமை நிறைவு செய்தார்.

மொத்தம் 25 நாட்களில் சுமார் 80 மணி நேரம் வாதிட்டது தனக்கு மன நிறைவாக இருந்தது என்று பி.குமார் கூறினார்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாத்தை அவரது வழக்கறிஞர் பி.குமார் 25-வது நாளாக புதன்கிழமை முன் வைத்தார்.

அப்போது அவர் வாதிடும் போது, “இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை தொடங்கியது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளனர்.

தேவராஜன் என்கிற அரசு தரப்பு சாட்சியில் ஆரம்பித்து கடைசி சாட்சி வரை அனைவரையும் விசாரித்து, முதலில் ராகவன் என்கிற வழக்கறிஞர் மாதிரி குற்றப்பத்திரிகை தயாரித்து கொடுத்தார். அதில் வழக்கறிஞர் நடராஜன் திருத்தம் செய்தார். பிறகு, அப்போதைய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மேலும் சில திருத்தங்களை செய்து, ஒப்புதல் அளித்தார். இதன் பிறகு குற்றப்பத்திரிகையை அப்போதைய தலைமைச் செயலாளர் சரிபார்த்த பிறகே, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதிலிருந்து விசாரணை அதிகாரி தன்னிச் சையாக செயல்படவில்லை என்பது தெரியவருகிறது.

உச்ச நீதிமன்றம் 1968-ல் சரளா என்கிற பெண் தொடர்பான வழக்கிலும், 2013-ல் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடர்பான வழக்கிலும் வெளியிட்ட தீர்ப்பில், “விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அவருடைய பணியில் அரசோ, மற்றவர்களோ தலையிடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அவ்வாறு செயல்படுவது தண்டனைக்குரிய குற்றம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதே தீர்ப்பை 10-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்றங்களும் பல்வேறு வழக்குகளில் உறுதி செய்துள்ளன.

எனவே இந்த வழக்கில் அப்போதைய திமுக அரசின் தலையீடு காரணமாக விசாரணை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவர்கள்
நால்வரையும் விடுவிக்க வேண்டும்” என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

மனதுக்கு நிறைவு

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் பின்னர் கூறும்போது, “'எங்கள் தரப்பு இறுதிவாதத்தை 25 நாட்களில் சுமார்
80 மணி நேரம் முன்வைத்துள்ளேன். என்னுடைய வாதம் மன நிறைவாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் அனைவரின் இறுதி வாதமும் முடிந்தபிறகு, இறுதியாக எங்கள் தரப்பு நியாயத்தை தொகுத்து வழங்குவேன். அதில் இன்னும் பல தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்” என்றார்.
இதனிடையே பி. குமாரின் வாதம் முடிந்துள்ளதால், சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் தனது இறுதிவாதத்தை வியாழக்கிழமை தொடங்கவேண்டும் என நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார்.

Thursday, July 3, 2014

ஆயிரக்கணக்கான புடவைகளை மதிப்பீட்டு குழுவினரால் ஆறரை மணி நேரத்தில் எப்படி சரியாக மதிப்பிட முடியும்?



தி இந்து வியாழன், ஜூலை 3, 2014


ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான புடவைகளை மதிப்பீட்டு குழுவினரால் ஆறரை மணி நேரத்தில் எப்படி சரியாக மதிப்பிட முடியும்?

சொத்து மதிப்பை அதிகமாக காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே மதிப்பீட்டுக் குழுவினர் அதன் மதிப்பை தவறாக காட்டியுள்ளனர் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கள்கிழமை 8-வது நாளாக நடைபெற்ற இறுதிவாதத்தின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் வாதிடுகை யில், “போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்டபோது, 740 பட்டுப் புடவைகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியஸ்டர் ரக புடவைகளும் கைப்பற்றப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜெயலலிதாவிற்கு சொந்தமானது அல்ல. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி உள்ளிட்ட சிலரின் புடவைகளும் இருந்தன.
அந்த புடவைகளை மதிப்பீடு செய்வதற்காக ஜவுளித்துறையில் அனுபவம் மிகுந்த 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவினர், ஜெயலலிதா வின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகளை ஆறரை மணி நேரத்தில் மதிப்பீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பல்வேறு ரகம், தரம், விலையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகளை ஆறரை மணி நேரத்தில் மதிப்பிடுவது சாத்தியமில்லை” என்று தெரிவித்திருந்தார்.

திராட்சைத் தோட்டம்

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 9-வது நாளாக பி.குமார் மேற்கொண்ட இறுதிவாதத்தின்போது தெரிவித்ததாவது: “ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான திராட்சைத் தோட்டம், காலி இடம் மற்றும் கட்டிடத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 1997-ம் ஆண்டு சோதனையிட்டனர். அப்போது அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில வேளாண்துறை அதிகாரிகளும், நிலத்தை அளவிடும் கணக்காளர்களும் உடனிருந்தனர்.

சுமார் 10 பேர் அடங்கிய மதிப் பீட்டு குழுவினர் திராட்சைத் தோட் டத்தை பார்வையிட்டு, அங்கிருந்த விளைச்சலையும் கணக்கிட்டு மதிப் பிட்டுள்ளனர். 5 நாட்களில் மதிப்பீட்டு குழுவினரால் தோட்டத்தையும், தோட்டத்தில் விளைந்திருந்த திராட்சை யையும் எவ்வாறு துல்லியமாகக் கணக்கிட முடியும்?

காலியிடத்தின் மதிப்பை, அதை வாங்கிய தேதியில் வைத்து நிர்ணயிக்காமல், சோதனையிட்ட தேதியில் மதிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை பல லட்ச ரூபாய் உயர்த்திக் காட்டியுள்ளனர்.

மதிப்பீட்டு குழுவில் பணியாற்றிய அனைவரும் அப்போதைய திமுக ஆட்சியின் கீழ் பணியாற்றியவர்கள் என்பதால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை அதிகமாக காண்பித்து, சமூகத்தில் அவருக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதமாக செயல் பட்டுள்ளனர்'' என்றார்.
ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்னும் முடிவடையாத தால் அவரது வழக்கறிஞர் பி.குமாரை புதன்கிழமையும் தொடர்ந்து வாதிடு மாறு நீதிபதி டி'குன்ஹா அறிவுறுத்தினார்.

Tuesday, June 17, 2014

ஜெயலலிதா வழக்கில் மேலும் 5 தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல்





தி இந்து 17 ஜூன் 2014

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தங்களின் சொத்துகளை உடனடி யாக விடுவிக்கும்படி ஜெ ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்கள் சார்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது வரும் புதன்கிழமை விசாரணை நடை பெறவுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 33 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்கள் இரு மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தன. 

அந்த மனுக்கள் மீதான விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில்,''ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள எங்கள் நிறுவனத்தின் சொத்துகளை உடனடியாக‌ விடுவிக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா பேசுகையில்,''லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு மீது வாக்குமூலம் பதிவு செய்தல், குறுக்கு விசாரணை, இறுதிவாதம் என அனைத்தும் முடிந்துவிட்டது.

அதனால் அந்த மனு மீது விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளேன். அதே போல அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கும் மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம்,சைனோரா எண்டர்பி ரைசஸ் ஆகிய‌ நிறுவனங்களின் மனுக்கள் மீதான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வழங்கப்படும்'' என்றார்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெ ரியல் எஸ்டேட், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெ சசி ஹவுஸிங் டெவலப்மெண்ட், கிரீன் ஃபார்ம் ஹவுஸ் மற்றும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய 5 தனியார் நிறுவனங்கள் சார்பாக புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில்,''வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் எங்களுடைய நிறுவனங் களில் பங்குதாரர்களாக மட்டுமே இருக்கிறார்கள். 

இந்த 5 நிறுவனங்களுக்கும் அவர் களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்களுடைய நிறுவனங் களை குற்றம் சாட்டப்பட் டவ‌ர்களுடைய சொந்த நிறுவனங் களாக கருதி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைத்துள்ளனர்.

எனவே முடக்கப்பட்டுள்ள நிறுவன சொத்துகளை விடுவிக்க வேண்டும்''என கோரப்பட்டுள்ளது.
5 தனியார் நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட‌ நீதிபதி டி'குன்ஹா,'இந்த புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ள நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் எங்கே?' என வினவினார். 

அப்போது கிரீன் ஃபார்ம் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலாஜி ஆஜரானார். ‘மற்ற 4 நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் குமாருக்கு மஞ்சள் காமாலை. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

எனவே அவரால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை' என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதி, ‘அவருடைய முகவரியை நீதிமன்றத்திடம் அளியுங்கள். அவருக்கு சம்மன் அனுப்புகிறோம்' என்றார். 

இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

ஜெயலலிதா மனுவை விசாரிக்க நீதிபதி தயக்கம்

முதல்வர் ஜெயலலிதா

தி இந்து 17 ஜூன் 2014

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர் பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கை விசா ரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தன் தயக்கத்தை தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சொத்து தன்னுடையது என்று லெக்ஸ் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனம் உரிமை கோரியுள்ளது.

இதில் முடிவு தெரியும்வரை பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலா ளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய் துள்ளார். 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி சிங் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பார்த்த நீதிபதி விக்ரம் ஜித்சென், ‘இந்த வழக்கை நான் விசாரிப்பதில் உங்களுக்கு ஆட்சே பணை உண்டா?’ என்று கேட்டார். நீதிபதி விக்ரம்ஜித்சென், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமனம் உள்ளிட்ட பல மனுக்கள் அவரிடம் விசாரணைக்கு வந்ததால் நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘ஆட் சேபணை எதுவும் இல்லை’ என்றார். 

இதையடுத்து, மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருதரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை படிக்க வேண்டியிருப்பதால் வழக்கை செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்து ஒத்திவைத்தனர்.

அன்பழகனுக்கு தகுதி இல்லை

முன்னதாக, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
இடைக்கால தடையை நீக்கக் கோரி க.அன்பழகன் மனு தாக்கல் செய்துள் ளார். அவர் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர். அவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை.
அரசு வழக்கறிஞர் பாரபட்சமின்றி நடுநிலையுடன் நடந்து கொள்வது அவரது கடமை. அதில் தலையிடு வதும், அவரது நடத்தையில் குறை சொல்வதும் நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். சொத்துக் களை முடக்கி வைத்துள்ள உத்தரவை வாபஸ் பெற கடந்த மாதம் 26-ம் தேதி ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அன்பழகன் தரப்பில் கூறப்பட் டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இந்த வழக்கில் தலையிட அவருக்கு தகுதி இல்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு அவசியம் இல்லை

பெங்களூர் வழக்குக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

இது வழக்கை காலதாமதப் படுத்த தொடரப்பட்டுள்ள மனு. சொத்து வழக்கு 2010-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. வழக்கு முடியும் தருவாயில் உள்ளது.

இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட போது, சொத்துக்களை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மாற்றப்படவில்லை.

லெக்ஸ் பிராபர்டீஸ் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மொத்தம் 12 நிறுவனங்கள் சொத்துக்களை தங்களுடையவை என்று கோரியுள்ளன.

இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சொத்துக்களை முடக்கும் உத்தரவை வாபஸ் பெறுவதாக கடந்த மாதம் 26-ம் தேதி அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு இப்போது அவசியம் இல்லை.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.