Wednesday, September 24, 2014

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது: பெங்களூர் நீதிபதி டி'குன்ஹா

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்: ம.பிரபு
தி இந்து:புதன், செப்டம்பர் 24, 2014

ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற வேண்டும் என பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி விடுத்த கோரிக்கையை நீதிபதி டி'குன்ஹா நிராகரித்துவிட்டார். எக்காரணம் கொண்டும் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது எனவும் அன்றைய தினம் உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார். போலீஸாரின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்திபவனுக்கு நீதிமன்றம் மாற்றப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில் பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி,குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ஹரிசேகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். பெங்களூர் போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தமிழக உளவுப் பிரிவு உயரதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவு உயரதிகாரிகளும் நேற்று வந்திருந்தனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அன்றைய தினம் பரப்பன அக்ரஹாரா பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, சிறை வளாகம் மட்டுமில்லாமல் ஜெயலலிதா பயணிக்கும் வழிநெடுகிலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்பு வழங்குவது, கர்நாடக உளவு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு போலீஸாருடன் ஆலோசனை நடத்துவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தீர்ப்பு தேதியை மாற்ற கோரிக்கை

இதனிடையே நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், ‘ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் செப்டம்பர் 27-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. மைசூர் தசரா திருவிழா, பெங்களூரில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால் பெங்களூரில் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

எனவே முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகும்போது உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு சில சிரமங்கள் எழுந்துள்ளன. அன்றைய தினம் பரப்பன அக்ரஹாராவில் அதிமுகவினர், பொதுமக்கள், செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள் என 30 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வரக்கூடும் என்பதால் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான போலீஸா ரைக் கொண்டு பாதுகாப்பு வழங்கினால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தீர்ப்பை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
போலீஸாருக்கு கண்டனம்

பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா, ''எக்காரணம் கொண்டும் ஜெயலலிதா மீதான வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது. தேவைப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையோ, மற்ற நிகழ்ச்சிகளையோ வேறு தேதியில் நடத்தச் சொல்லுங்கள்.

கடந்த முறை நீங்கள் (போலீஸார்) கால அவகாசம் கேட்டதால்தான் இந்த தேதிக்கு (செப்டம்பர் 27) தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தேதியை மாற்றச் சொல்வதை ஏற்க முடியாது.எனவே தீர்ப்பு வெளியாக உள்ள வரும் சனிக்கிழமை பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்துக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment