Thursday, September 25, 2014

உச்சநீதிமன்றம் :218 சுரங்கங்களில், 214 சுரங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு

214 சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு








அறிவிப்பு
1993 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் மத்தியஅரசு ஒதுக்கீடு செய்த நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் சட்டவிரோதம் மற்றும் பாரபட்சமுள்ளவை என கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
எச்சரிக்கை
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்கான வழிகாட்டு முறைகளை கண்காணிப்புக் குழு பின்பற்றவில்லை என்றும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டினர். எனவே 1993 முதல் 2010 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்வது பற்றி முடிவு எடுக்க நேரிடும் எனக் கூறியிருந்தனர்.
அதிரடி தீர்ப்பு
இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்தநிலையில் 218 நிலக்கரி சுரங்கங்களை ரத்து செய்வது தொடர்பாக, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. இதன்படி, 1993 முதல் 2011ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒதுக்கப்பட்ட 218 சுரங்கங்களில், 214 சுரங்களின் உரிமத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 4 பிளாக்குகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை.
வர்த்தகத்தில் தாக்கம்
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து உலோக பொருட்கள் மீதான பங்கு வர்த்தகத்தில் பெரும் சரிவு காணப்பட்டது. தீர்ப்பு வெளியானதும் சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் கீழே இறங்கி, பிறகு மீண்டது. உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள் 6 மாதங்களுக்குள் படிப்படியாக தங்களது செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
பல ஆயிரம் கோடி இழப்பு
மேலும், நிலக்கரியை வெட்டி எடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து கணக்கிட்டு ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.295-ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஏலத்தில் எடுத்த நிறுவனங்களுக்கு சுமார் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment