Wednesday, September 3, 2014

கேரள ஆளுநராக சதாசிவம் நியமனம்: செப்.5-ல் பதவியேற்பு

பி.சதாசிவம் | கோப்புப் படம்: எஸ்.சுப்ரமணியம்
தி இந்து:புதன், செப்டம்பர் 3, 2014

கேரள மாநில ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் தமைமை நீதிபதி சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் புதன்கிழமை பிறப்பித்தார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி சதாசிவம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரும் வெள்ளிக்கிழமை ஆளுநராகப் பொறுப்பேற்கிறார். இவருக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேரள ஆளுநராகப் பதவியேற்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் பா.ராமச்சந்திரன் மற்றும் ஜோதி வெங்கடாசலம் ஆகியோர் கேரள ஆளுநராக பதவி வகித்துள்ளனர்.

தனது நியமனம் குறித்து சதாசிவம் கூறும்போது, “கேரள மக்களின் நலனுக்காக பாடுபடுவேன்" என்று கூறினார்.
மேலும் தனது நியமனம் குறித்த சர்ச்சைகளுக்கு பிற்பாடு விளக்கம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சதாசிவம், கடந்த ஏப்ரல் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின், தனது சொந்த கிராமமான ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடப்பநல்லூரில் தங்கி விவசாயப் பணிகளை பார்த்து வந்தார்.
தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சதாசிவம், லோக்பால் தலைவர், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் போன்ற பதவிகளில் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்ததும், பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் கேரள ஆளுநராக பதவி வகித்து வந்த ஷீலா தீட்சித், அண்மையில் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தற்போது சதாசிவம் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி அளித்ததையடுத்து சனிக்கிழமையன்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

கேரள ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ள தகவல் அவரது சொந்த ஊரான காடப்பநல்லூர் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment