Saturday, July 12, 2014

போலி ஆவணங்கள் மூலம் அடுத்தவர் நிலத்தை அபகரிப்பவர் கை விரல்கள் வெட்டப்பட வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்

சென்னை உயர்நீதிமன்றம்.| கோப்புப் படம்.
தி இந்து சனி, ஜூலை 12, 2014

போலி ஆவணங்களை தயாரித்து அடுத்தவர் நிலத்தை அபகரிப்பவர்களின் கை விரல்கள் வெட்டப்பட வேண்டும். எனினும் அத்தகைய கடுமையான தண்டனை அளிப்பதற்கான சட்டம் நம் நாட்டில் இல்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார்.

சென்னையைச் சேர்ந்த பி.எம்.இளவரசன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓர் இடத்தை எஸ்.என்.பத்மநாபன் மற்றும் சிலரிடமிருந்து நான் வாங்கினேன். இதற்கான பத்திரப் பதிவு விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 17.4.2013 அன்று நடைபெற்றது. எனினும், அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட நிலப் பத்திரத்தை வழங்க சார் பதிவாளர் மறுத்துவிட்டார். நாச்சியப்பன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பத்திரப் பதிவை சார் பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளார். இது சரியல்ல என இளவரசன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான நாச்சியப்பன் (வயது 81) பதில் மனு தாக்கல் செய்தார். சாலிகிராமத்தில் 4,000 சதுர அடி இடத்தை கடந்த 1961-ம் ஆண்டு எனது மனைவி சரஸ்வதி பெயரில் வாங்கினேன். கடந்த 2001-ம் ஆண்டு எனது மனைவி இறந்துவிட்டார். அதன் பிறகு அந்த சொத்தை நான் பராமரித்து வந்தேன். கடந்த 13.2.2012-ம் தேதி சாலிகிராமத்துக்கு சென்றபோது எனது இடத்தில் சிலர் குடிசைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது.

விருகம்பாக்கம் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களை சரி பார்த்ததில் தனலட்சுமி, எஸ்.என்.பத்மநாபன் உள்ளிட்ட சிலர் போலி ஆவணங்களைத் தயாரித்து 1.12.2011 அன்று தங்களுக்கு சாதகமாக அந்த இடத்தை பத்திரப் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. இதற்கு பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் சிலரும் துணை போயுள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறையில் நான் புகார் அளித்தேன். நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தவர்கள் மீது காவல் துறையில் குற்ற வழக்கு பதிவு செய்து தற்போது, அது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே பதிவுத் துறை ஐ.ஜி.யிடமும் புகார் அளித்தேன். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஐ.ஜி., போலி ஆவணங்களை அளித்து பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார் என்பது எனக்கு தெரிய வந்தது.

இதற்கிடையே இந்த வழக்கின் மனுதாரர் இளவரசன் உள்ளிட்டோர் மீண்டும் போலி ஆவணங்களைத் தயாரித்து அதே இடத்துக்கு கடந்த 17.4.2013 அன்று பத்திரப் பதிவு செய்துள்ளனர் என்று தனது பதில் மனுவில் நாச்சியப்பன் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

இந்த வழக்கு தொடர்பான எல்லா ஆவணங்களையும் ஆராய்ந்ததில் மனுதாரர் இளவரசன் மேலும் சிலருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நாச்சியப்பனின் சொத்தை பத்திரப் பதிவு செய்துள்ளது தெரிய வருகிறது.

இஸ்லாமிய நாடுகளில் சாதாரண திருட்டு குற்றத்துக்கு கூட கைகளை வெட்டுதல், விரல்களை நறுக்குதல் போன்ற மிகக் கடுமையான தண்டனைகள் உள்ளன. போலி ஆவணங்கள் மூலம் அடுத்தவர் நிலத்தை அபகரிப்பவர்களின் கை விரல்கள் வெட்டப்பட்டு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனினும் அதற்கான சட்டங்கள் நம் நாட்டில் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பான குற்ற வழக்கில் விசாரணை நடத்தி வரும் விசாரணை நீதிமன்றம் விரைவாக விசாரணையை முடித்து, மனுதாரருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையை வழங்கிட வேண்டும். மேலும் மனுதாரர் வழக்குச் செலவாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரரிடமிருந்து அந்தத் தொகையை உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வசூலித்த பிறகு, புற்றுநோய் ஆய்வு நிறுவனம், பார்வையற்றவர்களுக்கான பூந்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி, உதவும் கரங்கள், சென்னை ஒய்.ஆர்.ஜி. எய்ட்ஸ் ஆய்வு மையம் ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் பிரித்து வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment