Tuesday, March 18, 2014

'மெடிகிளைம் பாலிசி' எடுத்தவருக்கு மருத்துவ செலவு வழங்க உத்தரவு


சென்னை: தினமலர் ‎:17 - 03- 2014

'மெடிகிளைம் பாலிசி' செல்லத்தக்க காலத்தில், மருத்துவ சிகிச்சை பெற்றவருக்கான முழு செலவினத்தையும் வழங்க வேண்டும்' என, எச்.டி.எப்.சி., நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, அசோக் நகரை சேர்ந்த, அகமது சிராஜுதீன் என்பவர், சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

உடல் நலக்கோளாறு:

எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், 'மெடிகிளைம் பாலிசி' எடுத்து இருந்தேன். இந்த பாலிசி, 2010, செப்., 22 முதல் 2011, செப்., 21 வரை செல்லுபடியாகும். உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, 2011, பிப்., 19 முதல், மார்ச், 3 வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். மருத்துவ செலவின ஆவணங்களை இணைத்து, பாலிசி தொகையை வழங்குமாறு கோரினேன். ஆனால், வழங்கப்படவில்லை. தொகையை வழங்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார். இந்த மனுவுக்கு, எச்.டி.எப்.சி., நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

9 சதவீத வட்டி:

இந்த நிலையில், வழக்கை விசாரித்த, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் தன் மருத்துவ சிகிச்சைக்காக, 1.81 லட்சம் ரூபாய் செலவழித்ததற்கான ஆதாரங்களை அளித்துள்ளதால், அந்த தொகையை எச்.டி.எப்.சி., நிறுவனம் திருப்பி வழங்க வேண்டும். அதற்கு, 9 சதவீத வட்டி வழங்க வேண்டும். மன உளைச்சல் மற்றும் இழப்பீடாக, 27 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என, தெரிவித்தது.

No comments:

Post a Comment