Monday, November 25, 2013

நீதி வழங்கலில் அரிய சாதனை!



  தி இந்து :தலையங்கம் :திங்கள், நவம்பர் 25, 2013

இந்திய நீதித் துறை வரலாற்றில் சனிக்கிழமை முக்கியமான நாள். அன்று ஒரே நாளில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் உள்ளிட்ட நீதிபதிகளும் நீதிமன்றப் பணியாளர்களும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த உலக சாதனைக்குப் பாராட்டுக்குரியவர்கள்.

உச்சநீதிமன்றம், 21 உயர் நீதிமன்றங்கள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர நீதிமன்றங்கள் இணைந்து இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டன. ஒரே நாளில் எப்படி இவ்வளவு வழக்குகள் விரைந்து தீர்வுக்கு வந்தன? நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு இணங்கி வந்த வாதிகளும் பிரதிவாதிகளும் நீதிபதிகள் முன்னிலையில், தங்கள் வழக்கு குறித்துப் பேசி, சுமுகமான உடன்பாட்டுக்கு வந்ததை அடுத்து வழக்குகள் முடிவுக்கு வந்தன.

இப்போது மக்கள்தொகை அதிகமாகிவிட்டது, மக்களிடையே ஒழுக்கமும் நல்ல நடத்தையும் குறைந்துவிட்டன, ஏமாற்றுவதும் அதிகரித்துவிட்டது. இந்தக் காரணங்களால் வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… வகைகளும் பெருகிக்கொண்டே போகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதனால் ஊனமுற்றோர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் தேவைப்படுகிறது.

சமுதாயத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ற வேகத்தில் நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் நீதிபதிகளின் பதவிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை.

மருத்துவத் துறையில் எப்படி புதுப்புதுப் பிரிவுகள் உருவாக்கப்படுகின்றனவோ அவ்வாறே நீதித் துறையிலும் புதிய பிரிவுகளில் நீதிமன்றங்களை ஏற்படுத்தி, வழக்குகளைப் பிரித்து விரைந்து விசாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியதைப்போல நீதித் துறையின் அடித்தளக் கட்டமைப்பை விரிவுபடுத்தியும் தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தியும் இதை மேற்கொள்ள வேண்டும்.

தேங்கியுள்ள 3 கோடி வழக்குகளை விசாரிக்கத் தற்காலிக அடிப்படையில், சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டுக்குச் செயல்பட வைக்கலாம். குற்றம் புரிந்தோருக்கான அபராதத் தொகைகளைக் கடுமையாக உயர்த்தி, இந்தச் செலவுகளை ஈடுகட்டலாம். மக்களிடையே சட்ட உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

மத்திய அரசும் மாநில அராசாங்கங்களும்தான் ஏராளமான வழக்குகளுக்கு மூல காரணம். சட்டங்கள் தெளிவாக இருந்தாலும் அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும், துணிந்து செயல்பட மறுப்பதாலுமே பலர் நிவாரணம் கோரி நீதிமன்றங்களுக்குச் செல்ல நேர்கிறது.

தொழிலாளர் நீதிமன்றங்களில் வழக்குகளை இழுத்தடிப்பது தொழில் நிறுவன அதிபர்களுக்குத்தான் சாதகமாக இருக்கும். மனிதாபிமானத்தோடு அந்த வழக்குகளை, தகுந்த காலவரம்பு நிர்ணயித்து விரைவில் முடிப்பது அவசியம். ‘நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது - நீதி வழங்கப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வேண்டும்’ என்ற கொள்கைக்கு அதுவே ஏற்றதாக இருக்கும்.

நீதித் துறை, நிர்வாகத் துறை, வழக்கறிஞர்கள், சட்டமியற்றுவோர், பொதுமக்கள் அனைவருமே இணைந்து நீதித் துறையின் செயல்களுக்குத் தொடர்ந்து வேகம் கூட்ட வேண்டும்.

No comments:

Post a Comment