Saturday, October 20, 2012

"சத்யம்' ராமலிங்க ராஜூவின் ரூ. 822 கோடி சொத்து முடக்கம்





 19 October 2012 12:13 AM IST

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் பி. ராமலிங்க ராஜுவுக்குச் சொந்தமான ரூ. 822 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலைக்கு சத்யம் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்றவர் ராமலிங்க ராஜு. பின்னர் இந்நிறுவனத்தை அரசு ஏற்று அதிலுள்ள முறைகேடுகள் ஆராயப்பட்டன.

பின்னர் அந்நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தி நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. ஆந்திர வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ மற்றும் ஐஎன்ஜி வைஸ்யா ஆகிய வங்கிகளில் இவருக்குள்ள கணக்குகள் முடக்கப்பட்டன.
 சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அண்ட் சர்வீசஸ் லிமிடெட் (எஸ்சிஎஸ்எல்) நிறுவனத்தின் சொத்துகளும் முடக்கப்பட்டன.
இந்நிறுவனத்தின் பங்குகளை வேண்டுமென்றே உயர்த்தி முறைகேடு செய்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜுவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்துத் தவறான தகவல்களை அளித்து கொள்ளையடித்துள்ளதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 
இப்போது முடக்கப்பட்ட சொத்துகளின் பலன்களை ராஜுவோ அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அனுபவிக்க முடியாது.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்புக்குப் பிறகே இத்தொகையை அவர்கள் பயன்படுத்த முடியும். இந்த வழக்கை சிபிஐ ஏற்கெனவே விசாரித்து வருகிறது. சிபிஐ அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக 354 சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ. 250 கோடியாகும்.

No comments:

Post a Comment