Tuesday, June 17, 2014

பாரம்பரிய முறையில் உயர்நீதிமன்ற கட்டிட மேற்கூரை சீரமைப்புப் பணிகள்





 தி  இந்து ,17 ஜூன் 2014

பழங்கால பாரம்பரிய முறையில் உயர் நீதிமன்ற கட்டிடங்களின் மேற்கூரைகளை சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

1892-ம் ஆண்டு கட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 120 ஆண்டுகளைக் கடந்த சென்னை உயர் நீதிமன்ற கட்டிடங்களை பெரிய அளவில் சீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கட்டிடத்தின் தொன்மை மாறாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயர் நீதிமன்ற புராதானக் கட்டிடங்களை பாதுகாப்பதற்கான குழு, வளாகத்தில் உள்ள கட்டிடங்களை அண்மையில் ஆய்வு செய்தது. அந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் பெரிய அளவிலான சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என தெரிகிறது.

இதற்கிடையே உயர் நீதிமன்ற கட்டிடத்தின் கலச மாடங்களில் கட்டிடம் கட்டப்பட்ட ஆண்டில் பூசப்பட்ட அதே வண்ணத்தையே இப்போதும் பூசத் திட்டமிட்டுள்ளனர்.
பழைய வண்ணம் எந்த வகையைச் சார்ந்தது, அந்த வண்ணத்தில் கலந்துள்ள வேதிப் பொருள்கள் என்னென்ன போன்ற விவரங்களை அறிவதற் காக கலச மாடத்திலிருந்து மாதிரி வண்ணப் பூச்சு சேகரிக்கப்பட்டு, கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக தெரிகிறது.

அங்கிருந்து மும்பையில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்துக்கு வண்ணப்பூச்சின் மாதிரி தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள் ளதாகவும், ஆய்வின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மழைக் காலங்களில் உயர் நீதிமன்றக் கட்டிடத்தில் நீர்க் கசிவு ஏற்படும் மேற்கூரைப் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி யுள்ளன. இந்தப் பணிகளும் தொல்லியல் துறை நிபுணர்களின் ஆலோசனையுடன் பழங்கால பாரம்பரிய முறைப்படியே நடைபெற்று வருகின்றன.

ராஜபாளையம் பகுதியிலிருந்து சுட்ட சுண்ணாம்புக் கல் மூட்டைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதனை தண்ணீரில் கரைத்து சுண்ணாம்பு பால் தயாரிக்கிறார்கள்.

அந்த சுண்ணாம்புப் பாலை ஆற்று மணலில் நன்கு கலந்து, அந்தக் கலவையை சுமார் 10 நாள்கள் வரை நன்கு ஊற வைக்கின்றனர்.

அதேநேரத்தில் கடுக்காய்களை உடைத்து அந்தத் தூளை, கருப்பட்டி வெல்ல சர்க்கரைத் தூளுடன் சேர்த்து ஊற வைக்கின்றனர்.

சுமார் 3 நாள்கள் இந்தக் கலவை ஊறிய பின், இந்தக் கலவையின் கரைசலை சுண்ணாம்பு மணல் கலவையுடன் சேர்த்து புதிய கலவையை உருவாக்குகிறார்கள்.

இந்தக் கலவையை கட்டிடத்தின் மேற்கூரையில் பரப்பி அதன் மேல் நாட்டு ஓடுகளைப் பதிக்கின்றனர். நாட்டு ஓடுகளின் மேல் மீண்டும் கடுக்காய், கருப்பட்டி, சுண் ணாம்பு கலவையை கொட்டி மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன.

இந்தப் பணிகளுக்காக தற்போது சுண்ணாம்பு கலவை மற்றும் கடுக்காய், கருப்பட்டி வெல்ல சர்க்கரை கலவை தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாரம்பரியமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நடைபெறும் இந்தப் பணிகளை வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழி யர்களும் பெருமளவில் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர்.


No comments:

Post a Comment