Sunday, November 10, 2013

குறையொன்றுமில்லை





 நீதிநாயகம் சந்துரு தி இந்து  நவம்பர் 6, 2013

கடமையைத்தானே செய்தோம், அதற்கு வழியனுப்பு விழா அரசு செலவில் மனித ஆற்றல் விரயத்துடன் தேவையில்லை என்ற கருத்திற்கு ஓய்வு விழாவில் நீதிபதி சுதந்திரம் எதிர்வினையாற்றியுள்ளார். 

வரவேற்பு விழா போல் விடையனுப்பு விழாவை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை எனக்கூறிய அவர், அவ்விழாவிற்கான அரசு செலவினம் பற்றியும் மனித ஆற்றல் விரயத்தைப் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. 

காலையில் அரசு வாகனத்தில் வந்திருப்பினும் மாலையில் சொந்த வாகனத்தில் வீடு திரும்பப்போவதாகவும், நிச்சயமாக ரயிலில் பயணிக்கப்போவதில்லை என்றும் பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்.

நீதிபதிகளுக்குள்ள வசதிகளையும் சலுகைகளையும் குறிப்பிட்ட அவர் மகிழ்ச்சியுடன் பணியாற்றியதாகவும், ஓய்வூதிய விதிகளைத் தவிர குறையொன்றுமில்லை என்றும் குறிப்பிட்டார். பணியை திருப்திகரமாக செயலாற்றியிருந்தாலும் அதுபற்றிய மதிப்பீட்டை செய்யவேண்டியது வக்கீல்களே என்றும் குறிப்பிட்டார்.

ஒருவர் நீதிபதியாகும் முன்பு எவ்வித தரவுகள் அடிப்படையில் நீதிபதியாகிறார் என்பது பொது அறிவுக்குக் கிட்டாத விஷயம். பத்தாண்டுகள் உயர்நீதிமன்ற வக்கீலாகவோ, மாவட்ட நீதிபதி பொறுப்பில் இருந்தாலோ நீதிபதி பதவிக்குத் தகுதியானவராகக் கருதப்படுவர்.

 அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத வேறு காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் அவை பொதுப்படையாக அறிவிக்கப்படாத காரணிகளாகவே இருக்கின்றன. நீதிபதிகள் நியமனம் பற்றிய கோப்புக் குறிப்புகளை தருமாறு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் போட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து நியமனக் கோப்புகளின் ரகசியத்தை உறுதி செய்தது.

குடியரசுத் தலைவரால் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர், நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தைக்காகவோ, இயலாமைக்காகவோ மட்டுமே நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குப்பதிவின் மூலம் பதவி நீக்கப்படுவர். 

இயலாமைக்காக யாரும் இதுவரை நீக்கப்பட்டதில்லை. முறையற்ற சொத்துக் குவிப்பு (அ) நிர்வாக சீர்கேடு விளைவித்த செயல்களுக்காக பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் எடுத்த மூன்று நடவடிக்கைகளும் முற்றுப் பெறாமலே முடிந்துபோயின.

நியமிக்கப்பட்ட பின் நீதிபதியின் நடவடிக்கைகளை கண்காணிக்கவோ, விமர்சனம் செய்யவோ சட்டத்தில் இடமில்லை. நீதிமன்ற வராந்தாக்களில் நடைபெறும் கிசுகிசுக்கள், அநாமதேய துண்டு பிரசுரங்கள் (அ) தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும் மொட்டைக் கடிதங்கள் தவிர சுகாதாரமான விவாதங்கள், விமர்சனங்களுக்கும் இடமில்லை. 

வழக்கு விசாரிக்கும் வேகத்தைக்கொண்டு ஆமைகள் என்றும், பந்தயக் குதிரைகள் என்றும் குறிப்பிடுவதும் தீர்ப்புகள் வழங்குவதில் தாராளப் பிரபுக்கள் என்றும் கஞ்சப் பிரபுக்கள் என்றும் பட்டப் பெயர்கள் சூட்டி வக்கீல்கள் மகிழ்வதோடு சரி.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்து ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டாலும், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவருவதில்லை. பத்து சட்டக் கல்லூரிகள் தமிழத்தில் இருப்பினும் சட்டப் பேராசிரியர்களோ, சட்ட வல்லுநர்களோ அவற்றை விமர்சிக்கத் தயங்குகின்றனர். பன்னிரண்டிற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டில் உள்ள சட்ட சஞ்சிகைகளில் தீர்ப்புகள் வெளிவந்தாலும் அந்த சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் தீர்ப்புகள் குறித்து தங்களது கருத்துகளை பதிவதைத் தவிர்த்தேயுள்ளனர்.

2001ல் டெல்லியில் வெளிவந்த ‘Wah India’ என்ற ஆங்கில இதழ் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளை தரவரிசைப்படுத்த ஐம்பது மூத்த வழக்கறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு தரவரிசையை வெளியிட்டது. அப்பத்திரிகையின் ஆசிரியர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு சுயமாக தொடரப்பட்டு அவர்கள் மன்னிப்பு கோரிய பின் விடுவிக்கப்பட்டதுடன் ‘டாப் டென்’ நீதிபதிகளைப் பட்டியலிடுவது முடிவுக்கு வந்தது.

நீதிபதிகள் பைசல் செய்யும் வழக்கு விவரங்கள் தேசிய தகவல் மையத்தில் (NICNET) தினசரி பதிவு செய்யப்பட்டு வந்தாலும் அவ்விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வினவியோருக்கு துல்லியமாக வழங்கப்படுவதில்லை.

நீதிபதிகள் எவ்வித மதிப்பீட்டிற்கும் அப்பாற்பட்டவர்களா? 

நீதிபதி கேட்டுக்கொண்டபடி வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதா?

எப்பொறுப்பில் இருப்பினும் வள்ளுவர் வாக்கை யாரும் மறக்கக்கூடாது.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்” (குறள்- 448)

No comments:

Post a Comment