Friday, September 20, 2013

ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க மின் வாரியத்துக்கு உத்தரவு




தினமலர்  :வெள்ளி ,செப்டம்பர்,20, 2013

சென்னை: மின் கட்டணம் தொடர்பான வழக்கில், மனுதாரருக்கு, 5,000 நஷ்டஈடு மற்றும், கூடுதல் கட்டண தொகையை திருப்பி அளிக்கும்படி, மின்வாரியத்திற்கு, மாநில நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, சைதாப்பேட்டை, சடையப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேலு. இவர், கடந்த 2008, ஜூலை, 11ம் தேதி, தன் வீட்டு மின் உபயோக கட்டணமான, 5,897 ரூபாயை, சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி காசோலை வாயிலாக, மின்வாரியத்திற்கு செலுத்தினார்.


 அப்போது, அந்த காசோலை நல்ல நிலையில் இருந்தது. இதற்கிடையில், அதே மாதம், 27ம் தேதி மின்வாரியம் சார்பில், ரத்தினவேலுவுக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில், வங்கி காசோலை சேதமடைந்திருந்ததால், மின் உபயோக கட்டணத்துடன், வங்கி கட்டணம், கையாளும் கட்டணம் மற்றும் மறு இணைப்புக் கட்டணம் என, 1,125 ரூபாயை கூடுதலாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

கட்டணத்தை கட்டிய ரத்தினவேலு, இது தொடர்பாக, மின்வாரிய தலைவர், கோடம்பாக்கம் கண்காணிப்பு பொறியாளர், சைதாப்பேட்டை உதவி பொறியாளர் ஆகியோர் மீது, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், புகார் மனு தாக்கல் செய்தார்

 இந்த வழக்கை விசாரித்த, மாவட்ட நுகர்வோர் கோர்ட், மின்வாரிய தரப்பில் குறை இருப்பதாக கூறி, ரத்தினவேலுவிடம் வசூலித்த, 1,125 ரூபாயை திருப்பி அளிக்கவேண்டும்; அத்துடன், 10 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவாக, 5,000 ரூபாய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து, மின்வாரியம் தரப்பில், கூடுதல் ஆதார ஆவணங்களுடன், மாநில நுகர்வோர் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் கோர்ட் அளித்த தீர்ப்பை திருத்தம் செய்து, புதிய உத்தரவை, மாநில நுகர்வோர் கோர்ட் நீதிபதி, ரகுபதி அறிவித்தார். இதன் படி, நஷ்டஈடு தொகை, 10 ஆயிரத்தில் இருந்து, 5 ஆயிரமாகவும், வழக்குச் செலவுத் தொகை, 5,000 ரூபாயை, 1,000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தினவேலு கூடுதலாக செலுத்திய, 1,125 ரூபாயை அவருக்கு திருப்பித் தரவேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment