Tuesday, July 2, 2013

கோர்ட்டுகள் அரசின் எதிரி என கூறுவது தவறு: நீதிபதி சதாசிவம்




தினமலர் :2 july 2013

புதுடில்லி : கோர்ட்டுகள் அரசின் எதிரி என கூறுவது தவறானது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். நீதித்துறை, சட்டமன்றங்கள் மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையேயான உறவு எதிரானது அல்ல எனவும், இவை மூன்றும் அரசியலமைப்பின் 3 அங்கங்களாக ஒன்றினைத் தொடர்ந்து மற்றொன்று இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். ஜூலை 19ம் தேதியன்று தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறைக்கு எதிராக கூறப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : நீதித்துறை ஊழல்களுக்கு அப்பாற்பட்டது என நான் கூறவில்லை; அதே சமயம் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் நீதித்துறையில் குறைவாகவே உள்ளது; அவை மிகவும் அரிதாக நடக்கக் கூடிய செயல்கள்; அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன; நீதித்துறை உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அவ்வாறு நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்; ஒவ்வ‌ொரு ஐகோர்ட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்; அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் கோர்ட்டோ அல்லது நீதிபதியோ தலையிட முடியாது; அதே போல் கோர்ட் செயல்பாடுகளை அரசால் தடுக்கவோ, தலையிடவோ முடியாது; இருப்பினும் தேவைப்படும் பட்சத்தில் அரசின் செல்பாடுகள் குறித்து கோர்ட் தனது கருத்தை கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது; தேவையற்ற சமயத்தில் கோர்ட் அரசு குறித்து கருத்து தெரிவிக்காது; கோர்ட்கள் அரசின் எதிரி என கூறப்படுவது தவறு; எங்களின் கடமையை தான் நாங்கள் செய்கிறோம்.இவ்வாறு சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை கவுன்சிலின் வழிகாட்டுதல் சரியானதாக, தேவையானதாக இருந்தால் மட்டுமே அதனை நீதிபதி ஏற்க முடியும்; மற்றபடி நீதித்துறை கவுன்சிலின் முடிவு நீதிபதியின் முடிவாக இருக்காது; பார்லிமென்ட் அதிகாரத்தில் இருக்கும் போது மாநிலங்களின் ஒரு குறிப்பிட்ட விவகாரம் அல்லது அது தொடர்பாக விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியும்; பார்லிமென்ட் அதிகாரத்தில் இல்லாத சமயத்தில் கோர்ட் வழிகாட்ட முடியும்; ஊழல் வழக்குகளை பொருத்த வரை கடந்த 5 ஆண்டுகளில் அவற்றின் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது; அது குறித்து அரசு நடவடிக்கை மற்றும் விளக்கம் அளிக்க போதி அவகாசம் அளிக்கப்படும்; அது குறித்து கோர்ட், வரையரைக்கு உட்பட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும்; பின்னர் அவ்வழக்குகள் விசாரணை கோர்ட்டின் நடத்தப்பட்டு, பின்னர் ஐகோர்ட் வசமும், இறுதியாக சுப்ரீம் கோர்ட்டிற்கும் கொண்டு செல்லப்படும் இந்த முறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது; குற்றத்தின் அடிப்படையிலேயே ஜாமின் அளிப்பதும், மறுக்கப்படுவதும் முடிவு செய்யப்படுகிறது; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து விபரங்களையும் அளிப்பது தவறு அல்ல; அது நீதித்துறையின் ஒரு பிரிவு ஆகும். இவ்வாறு நீதிபதி சதாசிவம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment