தி இந்து:வியாழன், ஜூலை 24, 2014
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தை வழக்கறிஞர் பி.குமார் புதன்கிழமை நிறைவு செய்தார்.
மொத்தம் 25 நாட்களில் சுமார் 80 மணி நேரம் வாதிட்டது தனக்கு மன நிறைவாக இருந்தது என்று பி.குமார் கூறினார்.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாத்தை அவரது வழக்கறிஞர் பி.குமார் 25-வது நாளாக புதன்கிழமை முன் வைத்தார்.
அப்போது அவர் வாதிடும் போது, “இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை தொடங்கியது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளனர்.
தேவராஜன் என்கிற அரசு தரப்பு சாட்சியில் ஆரம்பித்து கடைசி சாட்சி வரை அனைவரையும் விசாரித்து, முதலில் ராகவன் என்கிற வழக்கறிஞர் மாதிரி குற்றப்பத்திரிகை தயாரித்து கொடுத்தார். அதில் வழக்கறிஞர் நடராஜன் திருத்தம் செய்தார். பிறகு, அப்போதைய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மேலும் சில திருத்தங்களை செய்து, ஒப்புதல் அளித்தார். இதன் பிறகு குற்றப்பத்திரிகையை அப்போதைய தலைமைச் செயலாளர் சரிபார்த்த பிறகே, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதிலிருந்து விசாரணை அதிகாரி தன்னிச் சையாக செயல்படவில்லை என்பது தெரியவருகிறது.
உச்ச நீதிமன்றம் 1968-ல் சரளா என்கிற பெண் தொடர்பான வழக்கிலும், 2013-ல் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடர்பான வழக்கிலும் வெளியிட்ட தீர்ப்பில், “விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அவருடைய பணியில் அரசோ, மற்றவர்களோ தலையிடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அவ்வாறு செயல்படுவது தண்டனைக்குரிய குற்றம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதே தீர்ப்பை 10-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்றங்களும் பல்வேறு வழக்குகளில் உறுதி செய்துள்ளன.
எனவே இந்த வழக்கில் அப்போதைய திமுக அரசின் தலையீடு காரணமாக விசாரணை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவர்கள்
நால்வரையும் விடுவிக்க வேண்டும்” என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
மனதுக்கு நிறைவு
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் பின்னர் கூறும்போது, “'எங்கள் தரப்பு இறுதிவாதத்தை 25 நாட்களில் சுமார்
80 மணி நேரம் முன்வைத்துள்ளேன். என்னுடைய வாதம் மன நிறைவாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் அனைவரின் இறுதி வாதமும் முடிந்தபிறகு, இறுதியாக எங்கள் தரப்பு நியாயத்தை தொகுத்து வழங்குவேன். அதில் இன்னும் பல தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்” என்றார்.
இதனிடையே பி. குமாரின் வாதம் முடிந்துள்ளதால், சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் தனது இறுதிவாதத்தை வியாழக்கிழமை தொடங்கவேண்டும் என நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment