வெள்ளி, செப்டம்பர் 20, 2013
வி.தேவதாசன்
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நீதிபதிகள் நியமன ஆணையத்தால் நீதித் துறை வலுப்பெறுமா அல்லது அதன் சுதந்திரம் பறிக்கப்படுமா என்பது குறித்த விவாதம் வலுவடைந்துள்ளது.
உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் நடைமுறையே தற்போது இந்தியாவில் உள்ளது. இதற்காக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் நீதிமன்ற கொலிஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் உள்ளன. அந்த கொலிஜியத்தில் தலைமை நீதிபதி தவிர மூத்த நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.
கொலிஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை அறவே இல்லை என்ற விமர்சனம் நாளுக்கு நாள் வலுவடைந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக ஓர் ஆணையத்தை அமைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ளது.
இந்த நீதிபதிகள் நியமன ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் சமுதாயத்தில் மதிப்பு மிக்க இருவர் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறைச் செயலாளரும் ஒரு அங்கத்தினராக இருப்பார். இதன் மூலம் நீதிபதிகள் நியமன நடவடிக்கைகளில் நீதித் துறை தவிர நிர்வாகத் துறையின் பங்கேற்பும் உறுதி செய்யப்படுகிறது.
ஒருபுறம் இந்த ஆணையம் பெரும் வரவேற்பை பெரும் நிலையில், மறுபுறம் இந்த ஆணையத்தால் நீதித் துறையின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசியல் குறுக்கீடு பெருகிவிடும் என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது பற்றி இந்திய பார் கவுன்சிலின் இணைத் தலைவரான எஸ்.பிரபாகரன் கூறும்போது, `1993-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசுதான் நியமித்து வந்தது. அப்போது ஏராளமான அரசியல்வாதிகள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் விரிவான விசாரணைக்குப் பிறகே தற்போதைய கொலிஜியம் முறையை உச்ச நீதிமன்றம் உருவாக்கியது.
இந்த கொலிஜியம் முறை சிறப்பாகவே செயல்படுகிறது. நீதிபதிகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் அண்மைக் காலத்தில் எழுந்துள்ளது. இதில் சில உண்மைகளும் இருக்கலாம். இந்தத் தவறுகளை சரி செய்துவிட முடியும்.
ஆனால் அதைச் செய்யாமல், நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு கூறுவது அடிப்படையான அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கே முரணானது. ஆணையத்தின் உறுப்பினர்களாக சமுதாயத்தின் மதிப்புமிக்க இருவர் நியமிக்கப்படுவர் என்று கூறப்படும் நிலையில், அவர்கள் யார், அவர்களுக்கான வரையறை என்ன என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை
.
இந்த ஆணையத்தில் நீதித்துறை பிரதிநிதித்துவம் குறைந்து ஆட்சியாளர்கள் பலம் பெற்றிருப்பார்கள். இதன் காரணமாக நீதிபதிகள் நியமனம் அரசியல் சார்ந்ததாகவே இருக்கும். மேலும் நீதிமன்றத்துக்கு வரும் பல வழக்குகள் அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராகவே உள்ள நிலையில், நீதிபதிகளை நியமிப்பதில் ஆட்சியாளர்களின் செல்வாக்கு அதிகரித்தால், அதன் காரணமாக சுதந்திரமான நீதித் துறை செயல்பாடு என்பது கேள்விக்குறியாகி விடும்.
ஆகவே, தற்போதைய ஆணையம் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் பெற்றால் அது சட்டத்தின் ஆட்சிக்கே சவாலாகி விடும்’ என்கிறார்.
எனினும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான கே.சந்துரு, தற்போதைய கொலிஜியம் முறை மிகப் பெரும் தோல்வியடைந்துவிட்டது என்று கூறுகிறார். தகுதியான, திறமையான, நேர்மையான, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான புரிதல்மிக்க, அறிவாற்றல் நிறைந்த, சட்டத்தின் ஆட்சி என்பதில் உறுதிமிக்க மற்றும் தைரியமானவர்களை அடையாளம் கண்டு, அத்தகையவர்களை நீதிபதிகளாக நியமித்திட தற்போதைய கொலிஜியம் முறையில் எந்த ஏற்பாடும் இல்லை
. இந்நிலையில் தற்போதைய உத்தேசிக்கப்பட்டுள்ள ஆணையம் மூலம், ஒளிவு முறைவு இல்லாத, ஓரளவுக்கேனும் வெளிப்படையான முறையில் நீதிபதிகள் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆட்சியாளர்களால் நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் அனைவரும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே செயல்படுவார்கள் என்பதை ஏற்க இயலாது. அது உண்மையானால் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்க முடியாது. மேலும், அந்தத் தீர்ப்புக்கு முழுமையான தடை விதிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறுத்திருக்கவும் முடியாது.
சட்டத்தின் ஆட்சி மூலம் இந்திய ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்தவர்கள் என நாம் பெருமையோடு கூறிக் கொள்ளும் சின்னப்ப ரெட்டி, பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.ஏ.தேசாய் போன்றவர்கள் அனைவருமே 1993-க்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள்தான்.
ஆனால் கொலிஜியம் முறை வந்த பிறகு இதுபோன்ற ஒருவர் கூட நீதிபதியாக நியமனம் பெறாதது ஏன் என கேள்வி எழுப்பும் நீதிபதி சந்துரு, அரசியல் குறுக்கீடு, நிர்வாகக் குறுக்கீடு அதிகரிக்கும் என்பது போன்ற காரணங்களைக் கூறி நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்ப்பதை ஏற்க இயலாது என்கிறார்.
நீதிபதிகள் நியமனத்தின்போது அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, தகுந்த முடிவெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஒப்பீட்டளவில் பார்த்தால் தற்போதைய கொலிஜியம் முறையை விட உத்தேசிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் நியமன ஆணையம் மேலானது என்று சந்துரு கூறுகிறார்.