தினகரன் 24 ஜூலை, 2014
சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் வரும் 26ம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்து, தலைமை நீதிபதி பணியிடம் கடந்த 5 மாதங்களாக காலியாக உள்ளது. நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அடங்கிய நீதிபதிகள் குழு முடிவு செய்தது.
அதன் படி புதிய தலைமை நீதிபதிக்கான ஒப்புதலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். இதையடுத்து, வரும் 26ம் தேதி புதிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவியேற்கிறார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் 26ம் தேதி காலை 11.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டெல்லியில் 1958ல் பிறந்தார்.
1976ல் பொருளாதார பட்டம் பெற்ற இவர், 1982ல் டெல்லியில் சட்டப் படிப்பை முடித்து டெல்லி பார் கவுன்சிலில் பதிவு செய்தார். சிவில், ரிட், கம்பெனி சட்ட வழக்குகளில் அதிக அனுபவம் பெற்ற இவர் 2001 மே 3ல் டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2003ல் நிரந்தரம் செய்யப்பட்டார். 2013 ஜனவரி 6 முதல் பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
No comments:
Post a Comment