15மார்ச் 2014
வாரம் 7 நாட்கள் செயல்பட்டு வந்த சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டு, இனி 6 நாட்கள் மட்டுமே செயல்படும்.
7 நாட்கள் பணி
சென்னையில் முதன்மை குடும்பநல கோர்ட்டு உட்பட 4 குடும்பநல கோர்ட்டுகள் உள்ளது. இந்த கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான எம்.ஒய்.இக்பால், வாரத்தில் 7 நாட்களும் குடும்பநல கோர்ட்டுகள் செயல்படும் என்று 2010–ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதனால், குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள வேலைக்கு செல்லும் தம்பதியர்கள், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வசதியாக இருந்தது.
வக்கீல்கள் அதிருப்தி
ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக் –கிழமைகளிலும் பணிக்கு வரவேண்டியதுள்ளது என்றும் தங்களது குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்றும் குடும்பநல கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இதையடுத்து, விடுமுறை கால கோர்ட்டு திட்டத்தை கைவிடும்படி ஐகோர்ட்டு தலைமை பதிவாளர்களிடம், பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் டி.பிரசன்னா உள்ளிட்ட பலர் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வழக்கு தாக்கல்
வாரத்தில் 7 நாட்கள் பணிபுரிவது தொழிலாளர் சட்டத்தின்படி குற்றம் என்றும் விடுமுறை கால குடும்பநல கோர்ட்டு திட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் சுதா ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குடும்பநல கோர்ட்டுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவதை மாற்றியமைத்து ஐகோர்ட்டு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
இதுகுறித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சென்னையில் உள்ள 4 குடும்பநல கோர்ட்டுகள் இனி வார இறுதி நாளான சனிக்கிழமையில் மட்டும் செயல்படும். ஞாயிற்றுக்கிழமையில் செயல்படாது. இந்த மாற்றத்தை குடும்பல நல கோர்ட்டு முதன்மை நீதிபதி உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
ஐகோர்ட்டின் இந்த முடிவினை வக்கீல்கள் வரவேற்றனர். அவர்கள், ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினர்.
No comments:
Post a Comment