கட்டப் பஞ்சாயத்துப் பேசி கல்லாக்கட்டுபவர்களுக்கு மத்தியில், பாமரர்களுக்கும் சட்டம் சொல்லிக் கொடுத்து, நீதிமன்றங்களில் வாதாட வைத்துக் கொண்டிருக்கிறார் எளம்பலூர் ராஜேந்திரன்.
பெரம்பலூரை அடுத்துள்ளது எளம்பலூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனை தினமும் காலை, மாலை வேளைகளில் பெரம்பலூர் ராம் திரையரங்கு எதிரிலிருக்கும் டீக்கடை வாசலில் கட்டாயம் பார்க்கலாம். இவரது வருகைக்காக அங்கே ஒரு கூட்டமே காத்திருக்கும். பருத்திச் சட்டையும் மடித்துக் கட்டிய கைலியுமாய் டீயை உறிஞ்சிக்கொண்டே இவர் செய்யும் சட்டப் பிரசங்கத்தைக் கேட்கத்தான் அத்தனைக் கூட்டம்!
நீதிமன்றங்களில் தனக்குத்தானே வாதாடி ஜெயித்தவர்களின் அனுபவத் தொகுப்புகளைச் சொல்லிச் சொல்லியே, படிக்காதவர்களையும் கோர்ட்டில் வாதாடவைத்துவிடுகிறார் ராஜேந்திரன். இவர் ஒன்றும் சட்டம் படித்தவர் அல்ல. சாதாரண விவசாயிதான். சட்டம் படிக்காத இவர் எப்படி சட்ட ஆலோசகர் ஆனார்? அவரே சொல்கிறார்..
“பசிச்சவனுக்கு மீனைத் தர்றதைவிட மீன்பிடிக்க கத்துத்தரணும் என்கிறதுதாங்க நம்ம பாலிஸி. எங்கிட்ட வர்றவங்களோட வழக்குப் பிரச்னையைவிட, வழக்காட வந்து போற பிரச்னையைக் கேட்கவே பரிதாபமா இருக்கு. ஏண்டா கேஸ் போட்டோம், கோர்ட் படியேறினோம், அந்த வக்கீல் கால்ல விழுந்தோம்னு வேதனையில புலம்புவாங்க. அவங்கள ஆசுவாசப்படுத்தி, ‘நீங்களே வாதாட வேண்டியதுதானே’ன்னு ஆரம்பிச்சி அவங்கள கோர்ட்டுல வக்கீலா கொண்டுபோய் நிறுத்துறதுதான் நம்மளோட வேலை’’ தட்டச்சு கணக்காய் தடதடவென பேசினார் ராஜேந்திரன்.
’’உனக்கு எங்கருந்து வந்துச்சு இந்த அறிவுன்னு கேக்குறீங்களா.. அதுவும் பட்டறிவுதாங்க. எங்க ஜாதிக் கொத்துல ஓரளவுக்கு பள்ளிப்படிப்பு பார்த்த ஆளு நான்தான். அந்தக் கித்தாப்புல, ஒருவாட்டி எங்க ஊரு தலைவரு பண்ணுன நிலமோசடி விவகாரத்தை தட்டிக் கேட்டேன். கொள்ளிக்கட்டையால முதுகை சொறிஞ்ச கதையாகிருச்சு. தன்னோட செல்வாக்கை வைச்சு எங்கள குடும்பத்தோட கொண்டு போயி போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வைச்சிட்டாரு தலைவரு.
மேல் விசாரணைக்காக வந்த ஏ.டி.எஸ்.பி., எங்கிட்ட கேட்டுட்டு சொன்னாரு, “சட்டம் அதிகாரிகளுக்காக இல்லை. உங்கள மாதிரியான சாமானிய சனங்களுக்குத்தான். இந்த மாதிரி ஒரு சில சம்பவங்களால நம்பிக்கை இழந்துடாதீங்க..”ன்னு. அதை அப்படியே மனசுல ஏத்திக்கிட்டேன். அதுக்கப்புறம் எல்லா பொதுப் பிரச்னைகளிலும் தலையிட ஆரம்பிச்சேன். சட்டத்தோட ஆழம் என்னன்னு பாத்துடலாமேங்கிற வைராக்கியம் வந்திருச்சு.
ஒரு தடவை சென்னையில செந்தமிழ்க்கிழார் என்பவரைச் சந்திச்சேன். அதிகம் படிக்காதவரா இருந்தாலும் புத்தகமெல்லாம் போட்டி ருக்காரு. எளிமையான மொழியில தனக்குத்தானே கோர்ட் வழக்குகளில் ஆஜராகி வாதாடுறது எப்படி?ன்னு அவரோட புத்தகத்தைப் படிச்சுத்தான் நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன்.
முதல் வழக்குலேயே நீதிபதியையே அசரடிச்சேன். “என்னது உனக்கு நீயே வாதாடுறீயா.. வக்கீலு வேணாமா’ன்னு நீதிபதி கேட்டாரு. “ஐயா.. ஒருவேளை என்னோட வழக்குத் தோத்துப்போனா எனக்குக் குடுக்குற தண்டனையில பாதியை வக்கீலுக்குக் குடுக்குறதா உறுதி குடுத்தீங்கன்னா, நான் வக்கீல் வைச்சிக்கிறேன்”னு சொன்னேன். அதைக் கேட்டுட்டு, நீயே வாதாடுன்னு விட்டுட்டாரு நீதிபதி.
அதுலேயிருந்து எந்த வழக்குக்குப் போனாலும் வக்கீல் தேடுறதில்லை. எல்லாமே நம்மதான். ஒவ்வொரு வழக்குலயும் நான் சந்தித்த அனுபவங்களைத்தான் இப்ப எங்கிட்ட வர்றவங்களுக்கு பாடமா சொல்லிக் குடுத்துட்டு இருக்கேன்’’.. கிடைத்த இடைவெளியில் படபடவென விஷ யத்தை சொல்லிவிட்டுக் கிளம்பினார் ராஜேந்திரன். தகவலறியும் உரிமைச் சட்டத்தில் ஏதாவது தகவல் வேண்டும் என்றாலும் இந்தப் பகுதி மக்கள் இவரைத்தான் மொய்க்கிறார்கள்.
தனது மகன் ரஞ்சித்குமாரை சட்டம் படிக்க வைத்திருக்கிறார் ராஜேந்திரன். மகன் பட்டம் வாங்கியதும் அவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாமரர்களுக்கு சட்டம் போதிக்கும் நுணுக்கத்தை இன்னும் மேம்படுத்தப் போகிறாராம் இந்த சாமானியர்களின் சட்ட ஆலோசகர்.
No comments:
Post a Comment