கலச மாடத்தின் எழில்மிகு தோற்றம் (படம்: தீபக் சங்கர்)
தி இந்து வி. தேவதாசன்அக்டோபர் 23, 2013
சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தின் கலச மாடங்களுக்கு (டோம்) புதிதாக வண்ணம் பூசுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
150 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தற்போதையக் கட்டடத்தில் கடந்த 1892-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தோ சார்சனிக் கட்டட முறையிலான இதன் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. அன்றைய நாளிலேயே ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கட்டடம் சென்னை மாநகரின் புராதானச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற கட்டடத்தின் 14 கலச மாடங்களிலும் பூசப்பட்டிருந்த வண்ணக் கலவைகள் உப்பு கலந்த கடல் காற்றின் காரணமாக தற்போது மங்கலாகி விட்டன. ஆகவே, புதிதாக வண்ணம் பூசும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. புராதனச் சின்னம் என்பதால், கட்டடத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எவ்வாறு வண்ணம் பூசுவது என்பது பற்றியும், எந்த வகை வண்ணங்களை பூசலாம் போன்றவை தொடர்பாகவும் இந்திய தொல்லியல் துறையின் வழிகாட்டுதல்களை பொதுப் பணித் துறை கோரியுள்ளது.
இன்னும் ஓரிரு நாள்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற கட்டடத்தின் கலச மாடங்களைப் பார்வையிட்டு பொருத்தமான வண்ணங்களை பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாரம் கட்டும் பணி
இதற்கிடையே வண்ணம் பூசும் பணிக்கான முன்னேற்பாடாக கட்டடத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள கலச மாடத்தைச் சுற்றிலும் சாரம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் சுமார் 20 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சாரம் அமைக்கும் பணிக்காக சுமார் 2 ஆயிரம் சவுக்கு மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு முன்னர் கடந்த 1995-ம் ஆண்டு கலச மாடங்களுக்கு வண்ணம் பூசப்பட்டதாகவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மீண்டும் வண்ணம் பூசும் பணி நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment