நீதிநாயகம் சந்துரு :தி இந்து :அக்டோபர் 21, 2013
‘மூத்த வழக்கறிஞர்’ (Senior Advocate) என்ற அந்தஸ்துக்கான புதிய நடைமுறைகளை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. 1961-ம் வருட வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 16-ன் படி வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என்று இரு வகையாக்கப்பட்டு புதிய அந்தஸ்து வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் திறமை, அனுபவம் மற்றும் தனி அறிவைப் பொறுத்து அந்தஸ்து வழங்கப்பட்டு, அவர் நீதிபதி அணியும் அங்கியை போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுவர். நேரடியாக கட்சிக்காரருடன் பேசுவதும், கட்டணம் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளது. வக்கீல் ஒருவருடன் மட்டுமே அவர் ஆஜராகலாம். இந்த நடைமுறை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அங்கு ராணியின் வக்கீல் (Queen’s Counsel) என்றழைக்கப்படுகின்றனர்.
ஒரே தொழில் புரிபவர்கள் ஏன் வகைப்படுத்தப்பட்டனர்? என்ற கேள்வி எப்போதும் எழுப்பப்படுகிறது. நீதியரசர்களுக்கு கட்சிக்காரர்களுடைய ஊதுகுழலாக இல்லாமல் சட்டச் சிக்கல்களில் முறையான ஆலோசனை வழங்கவே இப்படிப்பட்ட அந்தஸ்து வழங்கப்படுகிறது. கௌரவங்கள் அனைத்தும் சமீபகாலங்களில் சீரழிந்து வருவது போல் இந்த அந்தஸ்து பெற்றோரும் பார் கவுன்சிலின் விதிகளின்படி செயல்பட தவறுகின்றனர். கட்சிக்காரர்களுடன் தொடர்பு, நேரடியாக கட்டணம் கேட்டுப் பெறுவது, அவர்களுக்கான மனுக்களை எழுதித் தருவது, தங்கள் பெயரிலேயே வக்கீல் நிறுவனம் நடத்த அனுமதிப்பது போன்ற கௌரவமற்ற நடைமுறைகள் தொடர்கின்றன.
மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்க உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் விதிமுறைகளை வகுத்துள்ளன. 3 நீதிபதிகளே உள்ள சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இரு ஆண்டுகளுக்கு முன்பு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து பெற்றனர். அவர்களில் ஒருவரும் சிக்கிம் மாநிலத்தில் தொழில் நடத்துபவர்கள் அல்ல. தாங்கள் தொழில் நடத்தும் உயர் நீதிமன்றத்தில் அந்தஸ்து பெற முடியாதவர்கள், சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் பெற்றது எப்படி என்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கும் விதிமுறைகளை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வக்கீல் சங்கம் தொடர்ந்த வழக்கில், அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில்தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதற்கான வழிமுறைகளை உருவாக்க, 7 நீதிபதிகள் குழு 1995-ல் அமைக்கப்பட்டது. அதன்படி, 15 வருட அனுபவமும் வருடத்துக்கு 2 லட்சத்துக்கு மேல் வருமானமும் 2 மூத்த வழக்கறிஞர்களின் சிபாரிசுகளுடன் மனு செய்து நீதிபதிகளின் ரகசிய வாக்குப்படி யார் 75% வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கே மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்படும் என்ற நடைமுறை உருவாக்கப்பட்டது.
கடுமையான இவ்வழிமுறைகளை மாற்றக் கோரிய முறையீடுகள் தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா, ஏ.கே.கங்குலி, எச்.எல்.கோகலே காலங்களில் நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இக்பாலின் முயற்சியால் மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெற்றால் போதுமென கூறப்பட்டது. மேலும் அவர் விரும்பினால் யாருக்கு வேண்டுமானாலும் அந்தஸ்தை வழங்கவும் உரிமையெடுத்துக் கொண்டார். சக நீதிபதிகள் சிலர் எதிர்ப்புக்குப் பின்னரும் எடுத்துக் கொண்ட அதிகாரத்தை அவர் விடத் தயாரில்லை.
தற்போது 5 நீதிபதிகள் குழு உருவாக்கிய புதிய பரிந்துரைகளின்படி, 10 நீதிபதிகள் கொண்ட குழு தகுதி, திறமை அடிப்படையில் பெயர்களை பரிந்துரை செய்யவும், குழுவினரிடையே ஒருமித்த கருத்து இல்லையென்றால் இறுதி முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் தலைமை நீதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை யார் பெற்றாலும், பார் கவுன்சிலின் விதிகளின்படி நடந்து கொண்டால் மட்டுமே கௌரவம் காக்கப்படும்.
No comments:
Post a Comment