செப்டம்பர் 22, 2014
வங்கியில் கடன் வாங்கும் முன்னரே அதை முழுமையாக கட்டாமல் தப்பிப்பது எப்படி என திட்டம் தீட்டும் பலருக்கு மத்தியில், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதில் முன்மாதிரியாக திகழ்கின்றனர் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பள்ளி மாணவிகள்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவிகள் சில மாதங்களுக்கு முன்னர் வங்கி உதவியுடன் புதிய மிதிவண்டிகளை வாங்கினர்.
கோழிக்கோடு நகர கூட்டுறுவு வங்கியில் மிதிவண்டி வாங்குவதற்காக மாணவிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கியது.
மாணவிகள் மிதிவண்டிக்கான தொகையை இரண்டு ஆண்டுகளில் திரும்பித்தர வேண்டும். கடன் தர வங்கி ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே வைத்தது. சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதியளிக்க வேண்டும் என்பதே அது.
வங்கியின் இந்த எளிய நடைமுறையை பின்பற்றி 5000 மாணவிகள் புதிய மிதிவண்டிகளை வாங்கினர். மிதிவண்டிகளை பெற்ற அடுத்த மாதம் முதலே, சுலபத் தவணையில் பணத்தை தவறாமல் செலுத்தத் துவங்கினர்.
ஒன்றிரெண்டு பேரைத் தவிர அனைவரும் ஒழுங்காக கடன் தவனையை செலுத்தி வருவதாக வங்கி பாராட்டியுள்ளது. பெரும்பாலும், மாணவிகளே வங்கிக்கு வந்து பணத்தை செலுத்துவதாக வங்கியின் பொது மேலாளர் சஜூ ஜேம்ஸ் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், பள்ளிக் குழந்தைகளின் இந்த பழக்கம் வரவேற்கத்தக்கது. பலர் தேவையில்லாமல் வங்கிக் கடன் பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால், பள்ளிக் குழந்தைகள் ஒழுங்காக கடனை திரும்பிச் செலுத்துவது ஏமாற்றுக் காரர்களுக்கு நல்ல படிப்பினை.
வங்கியில் வாங்கிய கடனை முறையாக திரும்பிச் செலுத்த வேண்டும் என்ற பழக்கத்தை அவர்கள் சிறிய வயதிலேயே கற்றுக் கொண்டுள்ளனர்.
பெண்களுக்கான சிறப்புத் திட்டமாக இதை செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டத்திற்கு உள்ள வரவேற்பை பார்த்த பின்னர், பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்க ஆலோசித்து வருகிறோம் என்றார்.
No comments:
Post a Comment