Wednesday, September 24, 2014

புத்தகம் : இளைஞர் கையில் சட்டம்

நிரபராதி பாமரனுக்குச் சட்ட வழிகாட்டி

தி இந்து:செப்டம்பர் 24, 2014

தன் நாட்டின் ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் தகுதியை 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் பெறுகிறார். இந்திய அரசியல் சட்டம் ஓட்டு போடும் உரிமையை வழங்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்துகிறது. ஓட்டுரிமை மட்டுமில்லாமல் இன்னும் பல்வேறு உரிமைகளும் ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளன.

நாட்டு நடப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி, புதிய கண்டு பிடிப்புகள் எனப் பலதரப்பட்ட விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டும் இளைஞர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்தானே!

நம் உரிமைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதன் மூலம் நாம் தன்னம்பிக்கையும், சுதந்திர உணர்வும் பெற முடியும். ஆனால் இந்தியச் சட்ட நூல் களை எங்கே தேடிப் படிப்பது? சட்டக் கல்வி பெறாமல் சட்டங்களைப் புரிந்துகொள்ள முடியுமா? போன்ற கேள்விகள் எழலாம்.
‘நிரபராதி பாமரனுக்குச் சட்ட வழிகாட்டி’ என்னும் புத்தகம் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சட்டம் தொடர்பான பொதுக் கேள்விகளை எழுப்பிப் பதிலும் தருகிறது.

காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நடைமுறை சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்களை எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறது. போலீசில் புகார் செய்வது எப்படி? தன் வழக்கில் தானே ஆஜராவது எப்படி?, நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது எப்படி?, குறுக்குக் கேள்விகள் கேட்பது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தருகிறது.

ஒரு கேள்விக்கு ஒரே பதில் என்பதோடு முடித்துக் கொள்ளாமல் சுவாரஸ்யமான உரையாடல் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நடைமுறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு விடை கிடைக்கிறது.

“தன் வழக்கில் தானே ஆஜராகுவது எப்படி?” என்ற பகுதியில் வக்கீல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா? நான் என் கேஸ்ல மட்டும்தான் வாதாட முடியுமா? அடுத்தவங்க கேஸ்லயும் வாதாட முடியுமா? வாதாடும் போது சட்டப்பிரிவுகள் குறிப்பிடாமல் மனுத் தாக்கல் செய்யலாமா? என்கின்ற கேள்விகளுக்கு ஆம், நிச்சயம் முடியும் எனப் பதில் அளிக்கிறார் ஆசிரியர்.

அதைத் தொடர்ந்து, உண்மைச் சம்பவங்களும், தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் விவரிக்கிறார். மேலும் பல சந்தேகங்களுக்கு நறுக்குத்தெறித்தாற்போல் தெளிவான உதாரணங்களோடு கூடிய விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

எளிமையான நடையில் செந்தமிழ்க்கிழார் எழுதி யிருக்கும் இந்நூல் பாமரர்களுக்கு மட்டுமல்ல படித்தவர்களுக்கும் சிறந்த சட்ட வழிகாட்டிதான்.

நர்மதா பதிப்பகம், 
10, நானா தெரு,பாண்டிபஜார்,
தி.நகர்,சென்னை-17 
9840226661

No comments:

Post a Comment