தி இந்து:செவ்வாய், ஆகஸ்ட் 5, 2014
வேண்டுமென்றே வங்கியில் பெற்ற கடனை செலுத்தாத நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிட்டிருந்தால் அவற்றின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விதி முறைகள் விரைவில் வெளியாகும் என செபி தெரிவித்துள்ளது.
வங்கியில் கடன்பெற்று அந்தக் கடனை திரும்ப செலுத்த போதிய நிதி ஆதாரம் இருந்தும், அந்த நிதியை வேறு திட்டங்களில் பயன்படுத்திவிட்டு, கடனை செலுத்தாமல் சில நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வங்கியின் வாராக் கடன் அளவைக் குறைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக நம்புகிறது. இத்தகைய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிட்டிருந்தால் அவற்றின் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய நிறுவனங்களை தடை செய்வது குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை திட்டவட்டமான முடிவு எதையும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இத்தகைய நிறுவனங்கள் பற்றிய விவரத்தை செபி-யுடன் பகிர்ந்து கொள்வதற்கு ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது.
பொருளாதார தேக்க நிலை காரணமாக சில நிறுவனங்கள் உண்மையிலேயே நிதி ஆதாரம் இல்லாமல், கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளிக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் தவிர்த்து பிற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்படுகிறது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு மிக அதிக தொகையை செலுத்தத் தவறிவிட்டது. இருப்பினும் இந்நிறுவனத்தை வில்புல் டிபால்டர்ஸ் பட்டியலில் சேர்க்க இன்னமும் சில வங்கிகள் தயங்குவதாக செபி தலைவர் யு.கே. சின்ஹா குறிப்பிட்டார்.
இந்த வார கடைசியில் செபி இயக்குநர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை மற்றும் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை ஆகியன குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். உள்பேர வர்த்தகம் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment