dinakaran :18April 2013
கலியுகத்தில் வழிபாட்டிற்குரிய சிவலிங்கத் திருமேனிகள் தேவசிற்பியான மயனால் வடிவமைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரம்மாண்ட புராணம் சொல்கிறது. அவற்றில் பெரணம்பாக்கம் என்னும் புண்ணியத் தலத்தில் சிவபெருமான் இந்த கலிகாலத்தின் கஷ்டங்களை தீர்த்து, மக்களை காத்தருள ருணஹரேஸ்வர மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். மகிமைகள் நிறைந்த மகேசனின் இந்த புண்ணியத் தலம் அக்கினித் தலமாகிய திருவண்ணாமலைக்கு மேற்கே போளூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மன்னராட்சி காலத்தில் வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்ற பிராமணர்கள் பலர், சுவாமி சந்நதிக்கு வடபால் குடியிருந்து இந்த வேதநாயகனுக்கு ஆறு காலங்கள் நடைபெற்ற ஆராதனைகளில் கலந்துகொண்டு, நான்கு வேதங்களையும் ஓதி வழிபட்டனர். அடுத்த சந்ததிகளுக்கு வேத மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து, தர்மத்தைப் பேணி வந்ததால் இந்த ஊர் சதுர்வேதமங்கலம், சதுர்வேதிப்பாக்கம், பிராமணப் பாக்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, இப்போது பெரணம்பாக்கம் என்று மருவி உள்ளது.
அது என்ன பெரணம்பாக்கம்?
இறைவன் மனிதப் பிறவிக்கு ஏற்படும் கடன்களைத் தீர்க்கும் சக்திபடைத்தவராக இத்தலத்தில் அருள்பாலிப்பதால் பெரிய+ருணம்+பாக்கம்= பெரணம்பாக்கம் என்றானது. சப்த கரைகண்ட க்ஷேத்திர வரிசையில் ஏழு சிவத்தலங்கள் சேயாற்றின் வடகரையில் அமைந்திருக்க அதன் கிழக்குப் பாகத்தில் போளூரின் நடுநாயகமாக இந்த சிவாலயம் அமைந்துள்ளது.ஒரு சமயம் ஏழு அந்தணர்களாகிய போதவான், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், வாமன், சோமன் ஆகியோர் பாவ விமோசனம் வேண்டி ஏழு குன்றுகள் மேல் தவம் இயற்றிக் கொண்டிருந்தபோது பாலமுருகனது சக்திவேல் அவர்களின் சிரசைக் கொய்து சென்றது. இந்த நிகழ்ச்சி பிரம்மனின் கட்டளையால் முருகனது வேலாயுதத்தால் முக்தி கிடைக்க அருளப்பட்ட திருவிளையாடல் ஆகும்.
முருகன் ஏழு தபஸ்விகளைக் கொன்ற பாவம் தீர்ந்திட ஏழு இடங்களில் சிவலிங்க பூஜை செய்யும்படி உமாதேவியார் பணித்தார். அன்னையின் வழிகாட்டுதல்படி ஏழு தலங்களில் முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்டார். காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென்மகாதேவ மங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகிய தலங்களில் வழிபட்டு, எட்டாவதாக பெரணம்பாக்கம் என்ற இடத்திற்கு முருகன் வந்தபோது பிரம்மஹத்தி தோஷம் துரத்தி வந்துகொண்டிருந்தது.
‘‘என்னைத் தொடர்ந்து ஏன் வருகிறாய்?’’ என்று கந்தவேள் கேட்க, ‘‘ஏழு அந்தணர்களுக்கும் முக்தி கிடைக்க பூஜை செய்த நீர் எனக்கு என்று எந்த விமோசனபலியும் தரவில்லையே’’ எனக் கேட்க, அந்த தலத்திலேயே ஆறுமுகம் கொண்டு சிவலிங்க பூஜை செய்து பிறவிப் பெருங்கடனைத் தீர்த்துக் கொண்டார். அதன் காரணமாக, இந்த சுவாமிக்கு ஜென்ம பாவ ருணஹரேஸ்வரர் என்றும் தல விநாயகருக்கு சங்கடஹர கணபதி என்றும் பெயர் வழக்கத்திற்கு வந்தது.
ஒரு சமயம் மகாவிஷ்ணு அமிர்தகலசம் அமைத்து சிவபூஜை செய்து வந்தார். அப்போது முருகப் பெருமானால் உருவாக்கப்பட்ட வெள்ளப் பிரவாகத்தால் அந்தக் கலசம் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. அந்தக் கலசத்தில் இருந்த தாமரை மலர் தங்கிய இடம் தாமரைப்பாக்கம் எனவும் பூணூல் ஒதுங்கிய இடம் பூண்டி எனவும் தர்ப்பைப்புல் ஒதுங்கிய இடம் பில்லூர் எனவும் கலசம் தங்கிய இடம் கலசப்பாக்கம் எனவும் கலசத்தில் சாற்றப்பட்ட நெற்றிப்பட்டை புதையுண்ட இடம் ஆபரணப்பாக்கம் என்ற பெரணம்பாக்கமாகவும் உருவானதாம். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் இந்த தலங்களின் திருநாமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இக்கோயிலின் தோரணவாயில் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்ற ஐந்து கலசங்களோடு திருக்கயிலாய காட்சியைக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக உள்ள திருச்சுற்றுகள் வேதபாராயண மண்டபத்தோடு இரண்டு பிராகாரங்களைக் கொண்டிருக்கின்றன. தலவிருட்சங்கள் சரக்கொன்றையும் மகாவில்வமும் ஆகும். உள்திருச்சுற்றின் முதலில் மகாகணபதி, வள்ளி-தெய்வானையுடன் ஆறுமுக சுவாமி, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, சிவாலய கருவறைக் கோஷ்டத்தில் முறையே, நர்த்தன கணபதி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு அருள்கிறார்கள்.
இவர்கள் தவிர அகத்தியர், காலபைரவர், மிருகண்டு மகரிஷி, சிவசூரியன், சனிபகவான், மகாலட்சுமி, நால்வர், பஞ்சலிங்க மூர்த்திகள், நந்தி ஆகியோரின் அற்புத தரிசனம் கிடைக்கிறது. அடுத்து பலிபீடம், துவஜஸ்தம்பம் என்று முறையாக அமைந்துள்ளன. ஆலய மகாமண்டபத்தை ஒட்டியபடி ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்ற துவார பாலகர்கள் காவல் காக்க அர்த்த மண்டபத்தை ஒட்டி கஜப்பிருஷ்ட விமானக் கருவறையின் கீழ் லிங்கத் திருமேனியாக ருணஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
தெற்கு நோக்கியபடி அன்னை மங்களாம்பிகை அபய வரத ஹஸ்தம் காட்டி, பாசம் அங்குசத்துடன் அருள்கிறாள். ஆலயத்தின் எதிரில் ருணஹர தீர்த்தமும் வடபாகத்தில் பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளன. தல ரட்சகராக கால பைரவர் விளங்குகிறார். இத்தலத்தில்தான் ஈசனும் உமையும் மிருகண்டு மகரிஷிக்கும் அகத்தியருக்கும் காட்சி கொடுத்துள்ளார்கள்.
‘‘மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தன
ப்ரதஹ
ஸ்திராஸனோ மஹாகாயஹ ஸர்வகாம பல
ப்ரதஹ
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமோஸ்துதே மமாஸேஷம் ருணமாஸு
விமோசய’’
- என்று போற்றி மங்களன் என்றழைக்கப்படும் அங்காகரனை வழிபடுவது வழக்கம். அந்த மங்களனே ஒருமுறை இந்த தேவியை வழிபட்டு கடன் என்ற பாவச்சுமை தீர்ந்திட உபாயம் கேட்க, ‘‘முழு நிலவு நாளில் பரமனை முற்றோதல் செய்து நெய்தீபம் ஏற்றி வில்வார்ச்சனை செய்து, தனது பத்ம பீடத்திலும் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் மக்கள் கொண்டு வந்து சேர்க்கும் பாவங்கள் கரையும்’’ என்றாள், அன்னை. அதன்படி அம்பிகை சந்நதிக்குப் பின்புறம் மங்கள தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, தேவியின் கட்டளைப்படி ஈசனை வழிபட அவருடைய கடன், பாவதோஷங்கள் நீக்கி, ருண-கடன், ஹர-தீர்த்தல் ஈஸ்வரன் ஆகப்பெயர் பெற்றார், அரன். தேவி மங்களன் ஆகிய அங்காரகனுக்கு அருளியதால் மங்களாம்பிகை, திருவுடையம்மை என்கிற நாமங்களைப் பெற்றாள்.
தீர்க்க முடியாதபடி கடன் சுமையால் நெஞ்சம் கலங்கி நிற்பவர்கள் இத்தல ஈசனை திங்கள், செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு, ‘ஓம் தத் புருஷாய வித்மஹே ருணஹரரூபாய தீமஹி தந்தோ ருத்ர ப்ரசோதயாத்’; ‘ஓம் மங்களரூபாய வித்மஹே பத்மபீடாய தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்’ என்ற மந்திரங்களை 21 முறை ஓதி வணங்க பணக் கடன், பிறவிக் கடன், பித்ரு கடன், தேவ கடன் ஆகியவை தீரும்.
இத்தனை மகிமை பொருந்திய மகேசனது ஆலயம், அந்நியர் படையெடுப்பாலும் இயற்கை சீற்றங்களாலும் மண்ணில் புதையுண்டு இருந்த இடம் தெரியாமல் போனது. மகான்களின் திருவாக்கின்படியும், அரசு ஆவணத்தின் உதவியோடும் ஆலயம் இருந்த இடம் அடையாளம் காணப்பட்டு சீர் செய்ய முயன்றபோது, இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டு அழகுற அமைந்திருந்தது தெரியவந்தது.
சில சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சிலைகளையும் வைத்து, சந்நதிகளுடன், முழு கோயிலாக உருவாக்க, சிவநேசர்கள் மிக உற்சாகத்துடன் களமிறங்கி இருக்கிறார்கள். போளூர்-சேத்துப்பட்டு சாலையில் மட்டப்பிறையூர் கூட்டுச்சாலை மற்றும் தேவிகாபுரம் சிறுநகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது பெரணம்பாக்கம். மேலும் தகவல் பெற: 8754405387 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
-வெ.விசுவநாதன்
No comments:
Post a Comment