எம்.ரமேஷ் தி இந்து சனி, மார்ச் 1, 2014
இந்தியாவில் வெகு சில தொழில் குழுமங்கள் அடிக்கடி
சர்ச்சையிலும், பெரும் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளும்.
இதற்கு அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், திட்டங்கள், அந்நிறுவனங்களின் அரசியல் தொடர்புகளும் முக்கியக்
காரணம்.
அந்த வகையில் இப்போது ஊடகங்களின் பார்வையில்
சிக்கியிருப்பவர் சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா
ராய். நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கைதாகி உள்ளார்
ராய். தொழில் வட்டாரத்தில் இவரை சஹாராஸ்ரீ என்றே
பலரும் அழைக்கின்றனர்.
முதலீட்டாளர்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடியைத்
திருப்பித் தராததற்காக ராய் கைதாகியுள்ளது தெரியும்.
சஹாரா குழுமத்தின் அங்கமான சஹாரா இந்தியா ரியல்
எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுசிங்
இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய இரு
நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு தவறான
வாக்குறுதி அளித்து நிதி திரட்டின. இவ்விதம்
திரட்டிய நிதியை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்குத்
திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச்
செயல்படுத்தாதால் சுப்ரதா ராய் கைது
செய்யப்பட்டிருக்கிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோஷன் லால் என்பவர்
அளித்த புகார்தான் இன்று சுப்ரதா சிறை செல்ல காரணமாக இருந்துள்ளது. மூன்று கோடி முதலீட்டாளர்களிடம்
ரூ. 24 ஆயிரம் கோடியைத் திரட்டியுள்ளது இந்நிறுவனம்.
127 லாரிகளில் விண்ணப்பம்
ஒரு கட்டத்தில் 127 லாரிகளில் 31,669 அட்டைப்
பெட்டிகளில் 3 கோடி விண்ணப்பங்கள் மற்றும்
2 கோடி ரிடெம்ஷன் விண்ணப்பங்களை செபி-க்கு
அனுப்பியிருந்தது இந்நிறுவனம். இந்த லாரிகள்
மும்பைக்கு வந்ததால் மிகப் பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டது.
அவை, 2009-ம் ஆண்டு இந்நிறுவனம் பொதுமக்களிடமிருந்து
பங்கு வெளியீடு மூலம் திரட்டிய தொகைக்கான
விண்ணப் பங்களாகும். செப்டம்பர் 30, 2009-ல்
இந்நிறுவனம் தாக்கல் செய்த டிஆர்எச்பி எனும்
விவர அறிக்கையின் மூலம் சஹாரா இந்தியா
ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சஹாரா
ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்
லிமிடெட் நிறுவனங்கள் மிகப் பெரும் தொகையைத்
திரட்டுவது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 25, 2009 மற்றும்
ஜனவரி 4, 2010-ல் இரண்டு புகார் கடிதங்கள்
செபிக்கு வந்தன. அதில் இந்நிறுவனம் பங்கு
பத்திரங்களை முறைகேடாக விருப்பத்தின்பேரில்
முழுவதும் மாற்றத்தக்க கடன் பத்திரங்களாக
மாற்றியதாகக் கூறப்பட்டது. இத்தகைய செயலில்
பல மாதங்களாக இந்நிறுவனம் ஈடுபட்டதாகக்
கூறப்பட்டிருந்தது.
ரோஷன் லால் அனுப்பியிருந்த கடிதம் நேஷனல்
ஹவுசிங் வங்கி மூலமாக செபிக்கு வந்தது.
அதில் இருந்த புகாரின் அடிப்படையில் சில
விளக்கங்ளை சஹாரா குழுமத்திடம் கோரியது செபி.
அத்துடன் பங்கு திரட்டுவற்கு முக்கிய ஆலோசனை
நிறுவனமாகத் திகழ்ந்த ’இனாம் செக்யூரிட்டீஸ்’
நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது செபி.
ஆனால் விசாரணையில் செபியிடம் ஆர்எச்பி தாக்கல்
செய்ததற்குப் பிறகு கடன் பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 50 முதலீட்டாளர்களுக்கு மேல்
இவ்விதம் மாற்றுவதற்கு செபி-யிடம் அனுமதி கோர
வேண்டும். ஆனால் கோடிக்கணக்கில்
முதலீட்டாளர்களைக் கொண் டிருந்தபோதிலும்
அதை சஹாரா குழும நிறுவனம் நிறைவேற் றவில்லை.
செபி நடவடிக்கை
இதைத் தொடர்ந்து நவம்பர் 24, 2010-ல் செபி ஒரு
இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதில்
திரட்டிய நிதிகளை முதலீட்டாளர்களுக்குத்
திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து மேல் முறையீட்டு ஆணையத்தில்
சஹாரா குழுமம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் 3 கோடி முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் ரூ. 25,781 கோடியைத்
திரும்ப அளிக்க வேண்டும் என தீர்ப்பாயம் ஜூன் 23, 2011-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
முறையிட்டது சஹாரா குழுமம். ஆனால்
ஆகஸ்ட் 31, 2012-ல் உச்ச நீதிமன்றம் சஹாரா
குழுமத்தின் இரு நிறுவனங்களும் ரூ. 24 ஆயிரம்
கோடியை செபி-யிடம் டெபாசிட் செய்ய வேண்டும்
என்று உத்தரவிட்டது.
நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாது குறித்து
செபி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சஹாரா
குழுமத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. இதையடுத்து
மூன்று தவணைகளில் நிதியை டெபாசிட்
செய்ய வேண்டும் என்று டிசம்பர் 5, 2012-ல்
உத்தரவிட்டது. முதல் தவணையாக ரூ. 5,120 கோடியை
செலுத்திய இந்நிறுவனம் அடுத்த தவணைகளை
செலுத்தவில்லை. ஆனால் முதலீட்டாளர்களுக்கு
ரூ. 20 ஆயிரம் கோடியை நேரடியாக திருப்பி
அளித்துவிட்டதாகக் கூறியது.
இந்த பதிலில் திருப்தியடையாத செபி
பிப்ரவரி 13,2013-ல் குழும நிறுவனத்தின்
வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை
கையகப்படுத்த உத்தரவிட்டது. அடுத்து
நிறுவன இயக்குநர்கள் நீதிமன்றத்தில் நேரில்
ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
இதையும் நிறைவேற்றத் தவறியதால்
நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகி, ஜாமீனில்
வெளி வரமுடியாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கைதானார்.
9.1 லட்சம் ஊழியர்கள்
ஆனால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி
பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சஹாரா குழுமம் இந்திய கிரிக்கெட் அணிக்கு
கடந்த 10 ஆண்டுகளாக பிரதான ஸ்பான்சராக
விளங்கியதன் மூலம் பிரபலமானது. சஹாரா
குழுமத்தை உருவாக்கிய சுப்ரதா முதல்
தலைமுறை தொழிலதிபராவார். 1978-ம் ஆண்டு
உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஆரம்ப
முதலீடு வெறும் 43 டாலர்தான்.
3 பணியாளர்களுடன் நிதி நிறுவனமாக இது
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டது.
35 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரியல் எஸ்டேட்,
ஊடகம், பொழுதுபோக்கு, சுற்றுலா, மருத்துவம்,
ஹோட்டல் துறை என பல்வேறு துறைகளில்
தடம் பதித்துள்ளது. புணே வாரியர்ஸ் கிரிக்கெட்
அணியும் இக்குழுமத்துக்குச் சொந்த மானதுதான்.
ஆனால் இவரது அதிகாரபூர்வ பதவி நிர்வாக
ஊழியர் மற்றும் தலைவர் என்பதுதான். மெக்கானிக்கல்
என்ஜினீயரிங்கில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ள
இவரது நிறுவனம்தான் இந்திய ரயில்வேத்துறைக்கு
அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலானோர்க்கு
வேலை வாய்ப்பை அளித்துள் ளதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் 9.1 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். நிறுவனத்தின்
மொத்த சொத்து மதிப்பு
தற்போது ரூ. 60 ஆயிரம் கோடிக்கு மேல்.
அனைத்திலும் தோல்வி
இந்நிறுவனம் பல்வேறு தொழில்களில்
ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும்
எந்த ஒரு தொழில் நிறுவனமும் லாபகரமானதாக
இயங்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.
இக்குழுமம் தொடங்கிய பெரும் பாலான தொழில்கள்
பெருமளவு நஷ்டத்தையே சந்தித்துள்ளன.
ஏர்லைன்ஸ் நிறுவன முயற்சியில் தோல்வியடைந்து
அதை ஜெட் ஏர்வேஸிடம் விற்று விட்டது சஹாரா.
சஹாரா குழுமத்துக்கு பிரதான நிதி ஆதாரமாக
விளங்குவது இந்நிறுவனத்தின் சஹாரா இந்தியா
ஃபைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட்
(எஸ்ஐஎப்ஓ) நிறுவனம்தான். வங்கியல்லாத
நிதி நிறுவனமாக இது செயல்படுகிறது.
இந்நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும்
சஹாரா இந்தியா லைஃப் இன்சூரன்ஸ்
நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறது.
எஸ்ஐஎப்ஓ நிறுவனத்தின் மீது பல்வேறு
நடவடிக்கைகளை ஆர்பிஐ எடுத்ததாக செய்திகள்
அவ்வப்போது வெளிவரும். ஆனால் சஹாரா
குழுமத்துக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும்
நிரூபிக்கப்பட்டதில்லை. இதனாலேயே எஸ்ஐஎப்ஓ
நிறுவனம் குறித்து பெரிய அளவில் சர்ச்சை
எழவில்லை.
ஆக்டோபஸ் கரங்கள்
இந்தியாவின் முதலாவது தனியார்
ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக பிரகடனப்படுத்திக்
கொண்ட சஹாரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம்
2008-09-ம் நிதி ஆண்டில் சந்தித்த நஷ்டம் ரூ. 18.15 கோடி
. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 183 கோடி. 2009- 10
நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை அதன்
இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
சஹாரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 18 நிதிகளை
நிர்வகிப்பதாக அறிவித்துள்ளது. லக்னோவில் 350
படுக்கைகளுடன் ஒரு மருத்துவ மனையையும்
இக்குழுமம் நடத்தி வருகிறது. மும்பையில் 7.42 ஏக்கர்
பரப்பளவில் சொகுசான 5 நட்சத்திர ஹோட்டலும்
இக்குழுமத்துக்குச் சொந்தமானது.
சமே என்ற பெயரில் ஹிந்தி செய்தி சேனல்
மற்றும் உருது செய்திப் பத்திரிகையையும் இந்நிறுவனம்
நடத்தி வருகிறது.
அத்துடன் ராஷ்ட்ரிய சஹாரா என்ற பெயரில்
ஆங்கில வார இதழையும் நடத்தி வருகிறது.
திரைப்படத் துறையையும் இக்குழுமம் விட்டு
வைக்கவில்லை. பிவாஃபா, பேஜ் 3, சர்க்கார்,
நோ என்ட்ரி, வான்டட் ஆகிய திரைப்படங்கள்
இக்குழுமத்தின் தயாரிப்பில் வெளிவந்தவை.
இவரது இரு மகன்களுக்கு பல நூறு கோடி
செலவில் மிகவும் தடபுடலாக நடத்தப்பட்ட
திருமணம் மிகவும் பேசப்பட்டது.
No comments:
Post a Comment