Tuesday, September 17, 2013

உயர் நீதிமன்றங்களில் தமிழ் வழக்கு மொழியாக...







Return to frontpage
செவ்வாய், செப்டம்பர் 17, 2013

டி. எல். சஞ்சீவிகுமார்

சென்னையில் இருக்கும் உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான பெயர் 'மெட்ராஸ்' உயர் நீதிமன்றம்தான். தமிழை வழக்கு மொழியாக்கும் பயணத்தின் முதல்கட்டமாக அதனை 'தமிழ்நாடு' உயர் நீதிமன்றமாக மாற்றும் சட்டரீதியான முயற்சியில் ஈடுபடலாம்.

உயர் நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடும் உரிமைக்காக மீண்டும் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. உயர் நீதிமன்றங்களில் தாய்த் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் ஆசை மட்டும் அல்ல... மொத்த தமிழ் சமூகத்தின் ஆசையும்கூட. ஆனாலும், இன்று வரை தமிழில் வழக்காடுவது என்பது கனவாகவே இருக்கிறது.

கனவு மெய்ப்பட என்னென்ன சாத்தியக்கூறுகள் இருக்கின்றன? என்னென்ன இல்லை? என்பதை நேர்மையுடன் நெறியாலோசனை செய்வோம்.
உயர் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. ஓர் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஒரு தீர்ப்பு குறைந்தது 5 பக்கம் என்று வைத்துக்கொண்டாலும் ஆண்டுக்கு 5 லட்சம் பக்கங்களை மொழிபெயர்க்க வேண்டும். ஒரு மொழி பெயர்ப்பாளர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 30 பக்கங்களை மட்டுமே மொழிபெயர்க்க முடியும். அதனால், நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.

ஆனால், உண்மையில் இங்கு அவ்வளவு மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை. இங்கு நிறையப் பேருக்கு ஆங்கிலம் தெரியும்; தமிழும் தெரியும். ஆனால், மொழி பெயர்க்கத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவர்கள் அனைவருக்கும் சட்டம் தெரியாது.

 சட்டம், நீதித்துறை மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே நீதித்துறை ஆவணங்களை அதன் இயல்பு மாறாமல் மொழிபெயர்க்க முடியும்.

சமீபத்தில் மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு எழுதிய 3 ஆயிரம் பேரில் 40க்கும் சற்று கூடுதலானவர்கள் மட்டுமே விளிம்பு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். சட்டம் படித்து பின் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்களுக்கே இந்த நிலை. தற்போது ஆங்கிலத்தில் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவே ஒன்று முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. அப்படி எனில், தமிழில் மொழி பெயர்த்து கிடைக்கப்பெற மேலும் பல காலம் ஆகும்.
என்ன செய்ய வேண்டும்?

தற்போது தமிழில் சட்டப் புத்தங்கள் மிகக் குறைவு. ஓய்வு பெற்ற நீதியரசர் மகராஜன் மொழிபெயர்த்த 260 மத்திய, மாநில சட்டங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன.

 மேலும், தற்போது உயர் நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் 'தீர்ப்புத் திரட்டு' இதழ் சம்பிரதாயத்துக்கென வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். 6 அல்லது 3 மாதங்களுக்கு முன்பு வெளியான பழைய தீர்ப்புகளை வெளியிடாமல் சமீபத்தைய தீர்ப்புகளை வரை அதில் வெளியிட வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பழைய தமிழ் சட்டப் புத்தங்கங்களைதான் தமிழ் வழி சட்டக் கல்லூரி மாணவர்கள் கற்கிறார்கள். 

ஆனால், அதன் பின்பு ஏராளமான சட்டத்திருத்தங்களும் ஆயிரக்கணக்கான தீர்ப்புகளும் வெளியாகிவிட்டன. எனவே, திருத்தப்பட்ட புதுப்பதிப்புகள் தமிழ் வழி சட்டக் கல்லூரி மாணவர்களுக்குத் தேவை.

சட்டம், நீதித்துறை தொடர்பான கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். மா.சண்முக சுப்ரமணியன் எழுதிய தமிழ் சட்டச் சொல் அகராதிக்கு பின்பு சட்டத்துக்கு என பிரத்யேக - தரமான அகராதிகள் வெளியிடப்படவில்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசு மொழி பெயர்ப்பாளர்கள் நியமன விஷயத்தில் இப்போது இருந்தே கவனம் செலுத்த வேண்டும்.

தமிழில் அதிவிரைவாக பதிவு செய்யும் தட்டச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தமிழ் மென்பொருள் சார்ந்த அத்தனை விஷயங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

தமிழ் வழக்கு மொழிக்காக தற்போது குழு அமைத்து போராடும் வழக்கறிஞர்கள் மொழி சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஓர் அறிஞர் குழு அமைத்து மொழி பெயர்ப்பு, சட்ட கலைச் சொற்கள், சட்ட அகராதி உருவாக்குதல் போன்ற பணிகளை தொடங்க வேண்டும்.

தமிழை வழக்கு மொழியாக்க இத்தனை வழிகள் இருக்கும்போது – ஏற்கெனவே சுமார் மூன்றரை லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் – நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என்பது ஒருபோதும் தமிழை வழக்கு மொழி ஆக்காது.







No comments:

Post a Comment