18 Sep 2013
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை கைது செய்ய முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வரும் நரம்பியல் டாக்டர் சுப்பையா என்பவருக்கும், பொன்சாமி என்ற ஆசிரியருக்கும் இடையே குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் டாக்டர் சுப்பையா சரமாரியாக தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஆசிரியர் பொன்சாமி, அவரது தாயார் அன்னப்பழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வழக்கறிஞர் பெய்சில், உறவினரான வழக்கறிஞர் வில்லியம் ஆகியோரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் செம்மஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், வழக்கறிஞர் பெய்சிலை கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் தலைமையில் காவல்துறையினர் நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றனர். அப்போது, பெய்சிலை கைது செய்து காரில் ஏற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் தாக்கப்பட்டதோடு, அவரது சட்டை கிழிந்தது.
இது குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், உயர் நீதிமன்ற பதிவாளரிடம் புகார் மனு அளித்தார். அதில், நீதிமன்ற வளாகத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் வழக்கறிஞர் பெய்சிலும், உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், வெளியாட்களுடன் வந்து சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தன்னை காரில் கடத்திச் செல்ல முயன்றதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில், கடத்தல் முயற்சி, மிரட்டல் விடுத்தல், அத்துமீறி நுழைதல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் சங்கரநாராயணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் இன்று காலை கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டையில் உள்ள ஜார்ஜ் டவுன் 8வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை அக்டோபர் 1ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புகுந்து வழக்கறிஞர் ஒருவரை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டரே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment