தினமலர் :ஜூலை 10,2013,23:29 IST
சென்னை: கிரெடிட் கார்டு நிலுவை தொகையை செலுத்திய பின்பும், வாடிக்கையாளரை பணம் கேட்டு மிரட்டிய, ஜி.இ., நிதி நிறுவனம், அவருக்கு, நஷ்டஈடு வழங்க, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அம்பத்தூரை சேர்ந்த, பிலிக்ஸ் என்பவர், அமைந்தகரை, ஜி.இ., நிதி நிறுவன மேலாளருக்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின், கிரெடிட் கார்டு வாடிக்கையாளரான நான், 2009, ஏப்ரலில், நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவையில், குறிப்பிட்ட தொகையை செலுத்த அனுமதி கோரினேன்.
இதற்கு ஏப்ரல், 13ம் தேதி ஒப்புதல் கடிதம் வழங்கினர். அதன்படி, 16ம் தேதி, ஒரே தவணையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினேன். அதன்பின், ஒன்றரை ஆண்டு கழித்து, திடீரென, "கிரெடிட் கார்டு நிலுவை தொகை, 79 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும்' என, தொலைபேசியில் மிரட்டினர்.
அதை தொடர்ந்து, நிலுவை தொகையை செலுத்தக் கோரி, நோட்டீஸ் அனுப்பினர்.
விதிமுறைக்கு மாறாக செயல்பட்டு மிரட்டியதற்கு நஷ்டஈடாக, ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் தயாளன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், "சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், முறையற்று செயல்பட்டுள்ளது
விசாரணையில் உறுதியாகிறது.
இதற்காக, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, ஜி.இ., நிதி நிறுவன நிர்வாகம், 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், வழக்கு செலவாக, 2,000 ரூபாயும் தர வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment