One India :Friday, December 14, 2012, 15:30 [IST]
சென்னை: எம்.ஜி.ஆர்.சமாதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் பார்க்க இரட்டை இலை போலத்தான் உள்ளது. இந்த இரட்டை இலை நடுவில் காம்பும் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார்.
ஆனால் அதை மறுத்து அட்வகேட் ஜெனரல் கூறியபோது, நீங்க தாவரவியல் படிக்கலையா என்று கிண்டலாக கேட்டார்.
மேலும், இதுதொடர்பாக 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எம்.ஜி.ஆர். சமாதியில் அமைக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அகற்ற கோரி திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்து வருகிறார். நேற்று நடந்த விவாதம் விவரம்:
திமுக வக்கீல் விடுதலை: கடந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி. ஆர் மற்றும் அண்ணா சமாதிகளை புதுப்பிக்க ரூ. 8 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் 3 கோடியே 40 லட்சத்தில் எம்.ஜி.ஆர். சமாதியில் வளைவு அமைத்து அதில் இரட்டை இலை சின்னம் வைத்துள்ளனர். இது சட்டவிரோதமானது. பெரம்பூர் நெடுஞ்சாலை யில் அதிமுக வளைவு அமைக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை அரசு பின்பற்றவில்லை.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்: 2007ல் 35 லட்சம் செலவில் கலைஞர் கருணாநிதி பெயரில் சட்டபேரவை பொன்விழா வளைவு அமைத்துள்ளனர்.
விடுதலை: பெயர்தான் வைத்துள்ளனர். திமுகவின் உதயசூரியன் சின்னம் அமைக்கவில்லை. ஆனால் இங்கு இரட்டை இலை சின்னம் அமைத்துள்ளனர். ராணி மேரி கல்லூரியில் கலைஞர் மாளிகை என்ற பெயரை கலை மாளிகை என்று மாற்றியுள்ளனர்.
அட்வகேட் ஜெனரல்: மனுதாரர் கூறுவது தவறு. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விடுதலை: ஜெயலலிதா பிலிம் சிட்டி என்ற பெயரை எம்.ஜிஆர். பிலிம் சிட்டி என்று மாற்றினர். இப்போது என்ன நிலை யில் உள்ளது என்று தெரிய வில்லை. மாயாவதி தனது கட்சியின் யானை சின்னத்தை அரசு செலவில் அமைத்ததை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அட்வகேட் ஜெனரல் : எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ளது இரட்டை இலை சின்னம் இல்லை என்று உறுதியாக கூறுகிறேன். தேர்தல் கமிஷன் அங்கீகரித்த இரட்டை இலை சின்னம் அமைக்கப்படவில்லை. இது இரட்டை இலை இல்லை. குதிரையின் இறகு. சிலையின் மேல்பகுதியில் தேன்கூடு போன்ற அமைப்புதான் உள்ளது.
விடுதலை: மக்கள் இதை இரட்டை இலை என்றுதான் கருதுவார்கள்.
அட்வகேட் ஜெனரல்: அப்படி ஏற்க முடியாது.
நீதிபதி: (சிரித்து கொண்டே) எம்ஜிஆர் சமாதியில் அமைக்கப்பட்ட வடிவமும் இரட்டை இலை போலத்தானே உள்ளது.?
அட்வகேட் ஜெனரல்: இரட்டை இலை இல்லை.
விடுதலை: இரட்டை இலை இல்லாவிட்டால் யாருக்கும் அழைப்பு அனுப்பாமல் ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக இந்த சிலையை முதல்வர் திறக்க வேண்டிய அவசியம் என்ன? வழக்கு தாக்கல் செய்து தடை வாங்கிவிடுவார்களோ என்று அஞ்சிதான் இதை முதல்வர் செய்துள்ளார். மக்கள் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி: அழைப்பு அனுப்புவது அரசு விருப்பம்.
அட்வகேட் ஜெனரல்: இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. இரட்டைஇலை வேறு, இது வேறு.
நீதிபதி: இந்த இரட்டை இலை நடுவில் ஏன் காம்பு உள்ளது?
அட்வகேட் ஜெனரல்: அது காம்பு இல்லை. அது ஒரு தூண்தான்.
நீதிபதி: (அட்வகேட் ஜெனரலை பார்த்து) நீங்கள் தாவரவியல் பாடம் படிக்கவில்லையா? காம்பு இல்லை என்று கூறுகிறீர்கள். காம்பு மாதிரியான தூண் என்று கூறுகிறீர் களா? இந்த வழக்கில் விரிவாக பதில் மனுவை அரசு 8 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதில் தீர விசாரணை நடத்தி தான் முடிவு எடுக்க முடி யும். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறேன். உள்துறை செயலாளர் உள்பட 7 பேர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment