Wednesday, December 12, 2012

நீதிபதி வி.கே. சர்மாவுக்கு எதிராக வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு







First Published : 12 December 2012 04:26 AM IST



 டிச. 11: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே. சர்மாவுக்கு எதிராக வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எம்.வி. ரகு நந்தகோபால் உள்ளிட்ட 9 பேர் சார்பில் அவர்களது பொது அதிகாரம் பெற்ற ராஜ திலகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ரகு நந்தகோபால் மற்றும் அவரது சகோதர, சகோதரிகளுக்குச் சொந்தமான 1.33 ஏக்கர் நிலம் பெசன்ட் நகர் பார்வதி தெருவில் உள்ளது. அந்த இடத்தை சாந்தோமைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறது.
இந்த வழக்கில் சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.சர்மா, தனியார் கட்டுமான நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எதிர் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன் ஆஜராகி வாதிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 13-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அதன் பின்னர் மூத்த வழக்குரைஞர் சித்ரா சம்பத் எதிர் மனுதாரர்கள் சார்பில் சில வாதங்களை நீதிமன்றத்தில் வைத்திட முயன்றார். ஆனால் ஏற்கெனவே எதிர் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் விஜயன் ஆஜராகி வாதிட்டு,  விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டு விட்டதால், சித்ரா சம்பத்தை வாதிட அனுமதிக்க இயலாது என்று நீதிபதி கூறி விட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்குரைஞர் சித்ரா சம்பத் கூறிய சில கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதால், அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது பற்றி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த நோட்டீஸ் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (டிச. 11) சித்ரா சம்பத் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மூத்த வழக்குரைஞர் சித்ரா சம்பத்துக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்தும், நோட்டீûஸ திரும்பப் பெற வலியுறுத்தியும் நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமையன்று வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர். இதற்கான அழைப்பை சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும், பெண் வழக்குரைஞர்கள் சங்கமும் விடுத்திருந்தது.
இதற்கிடையே டிசம்பர் 13-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் புதிய நோட்டீûஸ வழக்குரைஞர் சித்ரா சம்பத்துக்கு அனுப்புமாறு நீதிபதி வி.கே. சர்மா செவ்வாயன்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment