புதுடெல்லி புதன்கிழமை , செப்டம்பர் 10, 2014
சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா, 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஆகிய வழக்குகளில் தொடர்புடைய சிலரை தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை பொதுவாக சி.பி.ஐ. இயக்குனர் தனது அலுவலகத்தில் அதே வழக்கை விசாரித்து வரும் மற்ற அதிகாரிகளின் முன்னிலையில் சந்தித்து பேசவேண்டும் என்பது சட்ட விதியாகும்.
இந்த விதிமுறையை மீறி ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களை அவர் சந்தித்து பேசியதாக மூத்த வக்கீலும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பொது நல வழக்கில் ஆஜராகி வருபவருமான பிரசாந்த்பூஷண் குற்றம் சாட்டினார். ரஞ்சித் சின்காவின் வீட்டின் உள்ள பதிவேடுகளின் மூலம் இந்த உண்மை தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோல் ஹவாலா மோசடி வழக்கில் தொடர்புடைய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியையும் அவர் தனது வீட்டில் சந்தித்து பேசியதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த்பூஷண் பிரமாண பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தார். மேலும், ரஞ்சித் சின்காவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதினார்.
பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்காவுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய சின்காவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும் வழக்கை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment