தி இந்து:வெள்ளி, ஜூன் 20, 2014
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி பதவிக்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தின் பெயரை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மற்ற மூன்று பேரின் கோப்புகள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ரோஹின்டன் நாரிமன் ஆகியோரது பெயர்கள் உச்ச நீதிமன்ற புதிய நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய நியமனக் குழு இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின், வழக்கறிஞர்களாக உள்ள இருவரது பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அவர்களது பின்னணி குறித்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி, குறிப்புகளுடன் புதிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் கோபால் சுப்ரமணியம் பெயரை மத்திய அரசு நிராகரித்து உச்ச நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மற்ற மூவரின் பெயர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கோபால் சுப்ரமணியம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரித்த வர்மா குழு விசாரணையில் வழக்கறிஞராக பணியாற்றியவர். ஒடிசாவில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பிரசாரகர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கொலை குறித்த வாத்வா விசாரணைக் குழுவிலும் இடம்பெற்றவர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வழக்கில் நீதிமன்ற உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் வழக்கு, நாடாளுமன்ற தாக்குதல் வழக்குகளிலும் ஆஜராகி உள்ளார்.
சொலிசிட்டர் ஜெனரல், இந்திய பார் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, குஜராத்தில் நரேந்திர மோடி அரசு மீது புதிய குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அதன் விளைவாக, அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரைக்கும் பெயரை திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதை ஏற்கவும், நிராகரிக்கவும் நீதிபதிகள் நியமனக் குழுவுக்கு உரிமை உண்டு. மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து, நீதிபதிகள் நியமனக்குழு பரிந்துரையை மீண்டும் அனுப்பி வைத்தால், அதை ஏற்க வேண்டியது மத்திய அரசின் கட்டாயம்.
ஆனால், கோபால் சுப்ரமணியம் பெயரை நிராகரித்ததற்கான காரணம் குறித்த சிறு குறிப்புடன் கோப்பு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment