Thursday, October 17, 2013

காசோலை மோசடிக்கு அபராதம்: சுப்ரீம் கோர்ட் புதிய நிபந்தனை




தினமலர் :அக்டோபர் 17,2013,01:58 IST

புதுடில்லி: காசோலை மோசடி தொடர்பான வழக்கில், காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு, இரு மடங்கை அதிகரிக்காத வகையில் அபராதம் விதிக்க வேண்டும்' என கோர்ட்டுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

கோல்கட்டாவில், சோம்நாத் சர்கார் என்பவர், 69,500 ரூபாய்க்கு காசோலை வழங்கினார். அதை வாங்கியவர், வங்கியில் செலுத்திய போது, சோம்நாத் சர்கார் கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பி வந்தது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர், உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், கோர்ட் சோம்நாத் சர்காருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, பாதிக்கப்பட்டவருக்கு, இழப்பீடாக, 80 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து, சோம்நாத், கோல்கட்டா ஐகோர்ட்டில் அப்பீல் மனு செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட், சிறை தண்டனையை ரத்து செய்து, 80 ஆயிரம் இழப்பீடுடன், 69,500 ரூபாயையும் அளிக்கும்படி உத்தரவிட்டது. "ஐகோர்ட் குறிப்பிட்ட தொகையை தன்னால் வழங்க முடியாத நிலையில் உள்ளேன். கருணை காட்ட வேண்டும்' என, சர்கார், சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். 

இதை விசாரித்த நீதிபதிகள், டி.எஸ்.தாக்குர் மற்றும் விக்ரம்ஜித் சென் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: காசோலையில் உள்ள தொகையின் இரு மடங்கிற்கு மிகாமல் அபராதம் இருக்க வேண்டும்.

 இதற்கெனவுள்ள கட்டாய வரம்பை மீறாத வகையில் அபராதம் விதிக்க வேண்டும்.எனவே ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கூடுதலாக, 69,500 ரூபாய்க்கு பதில், 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

No comments:

Post a Comment