Tuesday, May 21, 2013
வங்கி கடன் வசூலுக்கு "எஸ்.எம்.எஸ்'- மத்திய அரசு உத்தரவு
தினமலர் :மே 20,2013,00:
புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளில், வசூலாகாத கடன் அதிகரித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் பெற்று, உரிய காலத்தில் திரும்ப செலுத்தாதவர்களுக்கு, அலைபேசி வாயிலாக, குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.,) மூலம், நினைவூட்டல் செய்தி அளிக்கும்படி, மத்திய நிதி அமைச்சகம், வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது.
அண்மையில் பாõர்லிமென்ட் நிலைக்குழு, பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருகிறது என்று சுட்டிக்காட்டியது. குறிப்பாக, சென்ற 2009-10ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 59,924 கோடி ரூபாயாக இருந்தது.
இது, 2010-11ம் நிதியாண்டில், 74,664 கோடி ரூபாயாகவும், 2011-12ம் நிதியாண்டில், 1,17,262 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என, நிலைக்குழு தெரிவித்திருந்தது.பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருவது
, வங்கி துறைக்கு மட்டுமின்றி, அது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, வங்கிகள் வழங்கிய கடனை, திரும்பப் பெறும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு, உரிய காலத்தில் கடனை திரும்பச் செலுத்தும் வகையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் தொலைபேசி வாயிலாக, நினைவூட்டல் செய்திகளை தெரிவிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வங்கிகள் வழங்கிய கடனை, ஒரு வாடிக்கையாளர், 90 நாட்களுக்குள் திரும்பச் செலுத்த தவறினால், அது வசூலாகாத கடன் பிரிவின் கீழ் சென்று விடுகிறது.
எனவே, அதுவரை, காத்திராமல், வங்கிகள் உரிய காலத்தில், வங்கி கடனை திரும்பச் செலுத்தும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம், பல வாடிக்கையாளர்கள், உரிய காலத்தில் பணம் செலுத்த துவங்குவர் என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பொதுத்துறை வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:எங்கள் வங்கியில், வங்கி கிளையின் உயரதிரகாரிகள், கடன் வாங்கியவர்களை, நேரடியாக தொடர்பு கொண்டு, கடனை திரும்பச் செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
இது தவிர, எஸ்.எம்.எஸ்., மற்றும் நினைவூட்டல் கடிதங்கள் வாயிலாகவும், அவ்வப்போது தகவல்களை அனுப்பி வருகின்றனர்.
கடனை திரும்ப பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment